Monday, August 17, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 12

இறைநம்பிக்கையே இறுதியில் வெல்லும்

அல்லாஹ் தன் அடியார்களை நெஞ்சுரங் கொள்ளச் செய்தான் இப்படிக் கூறி:
(விசுவாசிகளே) நீங்கள் தைரியத்i9த இழந்துவிட வேண்டாம். துக்கப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் தாம் மேன்மையடைவீர்கள். (அல்குர்ஆன் 3:139)
(உஹத் போர் தொடர்பான இறைவசனம் இது : மொழி பெயர்ப்பாளர்) உண்மையிலேயே இந்த இறைவசனம் அல்லாஹ்வின் வழியில் செய்யப்படும் போரோடு நேரடியாகத் தொடர்புடையது. இதைப் படித்தவுடன் நம் மனக்கண் முன்னே எழுந்து நிற்பது ஒரு போர்க்களமும் அதில் முஸ்லிம்கள் அவர்கள் அல்லாஹ்வை உண்மையாக நம்பி நிற்கும் போது கொண்டிட வேண்டிய நெஞ்சுரமும் தான். ஆனால் இந்த இறைவசனம் வெளிக்காட்டும் உணர்வும் உத்வேகமும் நம்மை என்றென்றும் அல்லாஹ்வின் பாதையில் உந்தித் தள்ளப் போதுமானவையாகும். புழதியைக் கிளப்பி ஊரைக் கவ்வி இழுக்கவரும் பொய்களின் தாக்கம் எதிரிகள் எடுத்து வைக்கும் ஏளனங்கள் வீம்பான விமர்சனங்கள் ஆட்கொள்ள வருகின்றோம் ஆட்பலத்தோடும் ஆயதபலத்தோடும் அடிமைப்படுத்திடுவோம் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களை என்ற போர்ப் பிரகடனங்கள். இத்தனையையும் எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டிட நம்மை நிலைப்படுத்தித் தரும் இறைவனின் உறுதிமொழி இது என்றால் அது சற்றேனும் மிகையாகாது. அல்லாஹ் ஒருவனைத் தவிர இல்லை வேறு இறைவன் என்ற அடிப்படை அல்லாதவற்றைக் கொண்டுவரும் அத்தனை குழப்பங்களிலிருந்தும் அல்லாஹ்வின் அடிமையை விடுவிக்கும் அற்புத ஆற்றல் பெற்றது இந்த இறைமொழி. அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை ஏற்றுக் கொண்டவர்கள் ஆள்பலமோ ஆயதபலமோ இல்லாதிருக்கும்போதும் ஆதரவுகளே அவர்களுக்கு இல்லை என்ற நிலையில் அவர்கள் இருக்கும் போதும் அவர்களை நாம்தான் அனைத்து ஆற்றல்களும் பெற்ற வல்லவர்கள் என எண்ணச் செய்திடும் ஆற்றல் பெற்ற தேறுதல் மொழி இது.
அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட அடியான எண்ணத்தால் நினைப்பால் ஏனையவர்களை விட உயர்ந்து நிற்கின்றான். நாடு மாநிலம் தேசியம் என்பவை அவனுக்கு எந்த வகையிலும் முக்கியமானவை அல்ல. அதே போல் தேசத்தந்தை தேசியத் தலைவர்கள் காவல் தெய்வங்கள் காவியத்தலைவர்கள் என்றெல்லாம் மௌட்டிகத்தை வழியாய்க்கொண்ட மக்கள் புகழ்பவர்களுக்கும் அந்த இறை நம்பிக்கையாளனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற அல்லோல கல்லோலங்களுக்கும் ஆரவாரங்களுக்கும் இறைநம்பிக்கையாளனுக்கும் எந்தத் தொடர்புமில்லை. மக்கள் பெரிதாகப் போற்றும் பழக்கவழக்கங்களும் மக்கள் புதியவை புதிரானவை எனப் போற்றுபவைகளும் இந்த இறை நம்பிக்கையாளனை எதுவும் செய்துவிட மாட்டா. ஏனெனில் அவன் ஏற்கனவே பண்பும் மாண்புமிக்க பல நல்ல பழக்க வழக்கங்களுக்குச் சொந்தக்காரன். அவனுடைய வழிகாட்டுதல்கள் அவன் பின்பற்றும் நாகரிகம் பண்பாட்டு கலாச்சாரம் ஆகிய அனைத்தும் படைத்த அல்லாஹ்விடமிருந்து வந்தவை. அந்த இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். படைத்தவனின் பாதையில் அவன் இருக்கின்றான். இந்த நெஞ்சுரம் அவனைப் படைக்கப் பட்டவைகளின் சலசலப்புகளைக் கண்டு கலங்கச் செய்திடுவதில்லை. இந்த உலகைப் புரிந்து கொள்வதில் இறைநம்பிக்கையாளனுக்குள் ஓர் அற்புதமான மனபலமும் அறிவுபலமும் வீற்றிருக்கும். அல்லாஹ்தான் இந்த உலகைப் படைத்தான். அவன் தான் இந்த உலகை இயக்கி வருகின்றான். அவனே இந்த உலகை ஒரு முடிவுக்கும் கொண்டு வருவான். இந்த அடிப்படையில் ஓர் இறைநம்பிக்கையாளன் தெளிவாக இருக்கின்றான். இதனால் இவைகுறித்து இந்த உலகில் மனிதர்கள் மேற்கொள்ளும் விவாதங்கள் ஆராய்ச்சிகள் குழப்பங்கள் கொந்தளிப்புகள் இவற்றிலிருந்து அவன் அப்பால் நிற்கின்றான். அவன் கொண்ட இறைநம்பிக்கை அவனை இவற்றில் வீழ்ந்து நெளியாமல் காப்பாற்றி உவகை கொள்ளச் சொல்கின்றது. இதனால் இந்த விவகாரங்களில் அவன் உயர்ந்தவனாகவும் தெளி;ந்தவனாகவும் இருக்கின்றான். வாழ்க்கையோட்டத்தில் எத்தனையோ எதிர் நீச்சல்கள் ஏமாற்றங்கள் ஏக்கங்கள் தயக்கங்கள் தாக்கங்கள் வெற்றிகள் மகிழ்ச்சிகள் விரக்திகள் பழிகள் பாராட்டுக்கள் போட்டிகள் போராட்டங்கள். மாறுபட்டும் வேறுபட்டும் வரும் இந்தச் காலச் சுழற்சியில் மனிதன் கலங்குகின்றான். மயங்குகின்றான் சில நேரங்களில் மகிழவும் செய்கின்றான். இத்தனையையும் எதிர்கொள்வதில் எத்தனையோ கோட்பாடுகள் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு மக்களிடையே புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இந்தக் கோட்பாடுகள் மனிதனுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கின என்பதைவிட அவனை மேலும் குழப்பி அவனுடைய பிரச்னைகளை இன்னும் அதிகமாகவே ஆக்கின. இதனால் மேலும் மேலும் மனிதன் சிக்கல்களுக்குள்ளாலேயே வீழ்ந்து கொண்டிருக்கின்றான்.
ஆனால் ஓர் இறைநம்பிக்கையாளன் இவற்றில் அகப்பட்டுக்கொள்வதில்லை. இந்த ப10மி ஒரு சோதனைக் களம் இதில் இவையெல்லாம் தான் வாடிக்கை என்பதை அவன் நன்றாக அறிவான். இந்தச் சோதனைகளை நாம் எத்துணை நேர்மையோடும் நெஞ்சுரத்தோடும் எதிர்கொள்கிறோம் என்பதே முக்கியம். இவை அனைத்திற்கும் அல்லாஹ் தெளிவாகவே வழிகாட்டியிருக்கின்றான். அந்த வழிகாட்டுதல்களில் நாம் நிலைத்து நின்றாலே போதுமானது என்ற இந்தத் தெளிவும் தேறுதலும் அவனை மலை போல் நிலைகுலையாமல் நின்றிடச் செய்கின்றது. இதிலும் அவன் ஏனையவர்களைவிட உயர்ந்தவனாகவும் தெளிந்தவனாகவும் இருக்கின்றான். நல்ல ஒழுக்கம் என்பது எது? இவற்றை நிர்ணயிப்பதில் மனித மனங்கள் மனிதர்களின் தராதரங்கள் காலந்தோறும் மாறி மாறி வந்திருக்கின்றன. ஒரு காலத்தில் உயர்ந்த ஒழுக்கங்கள் எனப் போற்றப்பட்டவை இன்னொரு காலத்தில் தேவையில்லாதக் கட்டுப்பாடுகள் என பேசப்பட்டிருக்கின்றன. இந்தக் கட்டுப்பாடுகளை உடைக்கப் போர்க்கோலம் ப10ண்டு நின்றிருக்கின்றது மனித இனம். அதே போல் ஒரு காலத்தில் கூடாவொழுக்கம் என ஒதுக்கப்பட்டவை. ஏற்றுக்கொண்டு எடுத்து வாழ்ந்திட வேண்டிய நவீனங்கள் என நாடப்பட்டு நாட்டு நடப்பாக ஆக்கப்பட்டுள்ளன. இந்தக் குழப்பங்களிலிருந்து மனித மூளைகள் இன்னும் முற்றாக முடிவாக விடுபட்டுவிடவில்லை. பழுதான இந்தச் சிந்தனைகளால் மனித இனம் பாழ்பட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது நாளுக்கு நாள். ஆனால் இறைநம்பிக்கையாளன் இவற்றிலிருந்து வெளிப்பட்டு விடுபட்டு தெளிவானதோர் வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அல்லாஹ் வகுத்துத் தந்துள்ள ஒழுக்கவிதிகள் தன்னை வழிநடத்தப் போதுமானவை என்பதை அவ்ன அனுபவத்தில் உணர்ந்து உயர்ந்து நிற்கின்றான். இதனால் அவனிடம் வேறு யாரிடமும் இல்லாததோர் அதிசயமான ஒழுக்கமும் அதன் வழிவந்த உயர்ந்த இங்கிதமும் காணப்படுகின்றது. இதேபோல் எதிர்ப்படும் இன்னல்கள் இடுக்கண்கள் இவற்றைக் கண்டு கலங்குவதில்லை. அல்லாஹ்வை ஏற்று அவன் வழியில் நடக்கும் இந்த அடியான். மறுமை என்ற இறப்பிற்குப் பின்னால் வரவிருக்கும் வாழ்க்கையை இந்த அடியான் நிதர்சனமாக நம்புகின்றான். அந்த வாழ்க்கையே நிரந்தரமானது. நிலையானது என்பதில் அவனுக்குள் எந்த ஐயமுமில்லை. அந்த வாழ்க்கையின் வெற்றியே அவனது இலட்சியம். இந்த வாழ்க்கையில் நிலையற்ற இந்தச் சோதனைக் களத்தில் வரும் எந்தச் சோதனையும் இன்னலும் இழப்பும் அவனை எதுவும் செ;யதிடாது. மறுமையில் கிடைக்கப் போகும் இந்த நிரந்தர நிம்மதிக்கு முன்னால் இவை எதுவுமில்லை என்பதை நன்றாக அறிவான் அவன். இந்த அறிவால் வந்தத் தெளிவால் அவன் வானளாவ தான் உயர்ந்து நிற்பதை உணருகின்றான். இப்படி இந்த உலகின் கேடுபாடுகளிலிருந்து விடுபட்டு உயர்ந்து நிற்கும் அவன் இந்த இறைவழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளாததால் மனிதர்களில் பலர் எதிர்கொள்ளும் வேதனைகளையும் சோதனைகளையும் கண்டு மனம் புழங்குகின்றான். இறைவனின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்ளாததால் இந்த மனிதர்களுக்கு ஏற்பட்ட அவலங்களைக் கண்டு அனுதாபம் கொள்கின்றான். அவர்கள்பால் அனுதாபம் மட்டுமல்ல அன்பும் பிறக்கின்றது. இதனால் அவன் இறங்கிவந்து இந்த அப்பாவிகளை விடுவிக்க அந்த அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை விளக்கிச் சொல்லி அவர்களையும் உயர்த்திடத் துடிக்கின்றான். இதைச் செய்யாவிட்டால் தான் அவர்களுக்குத் துரோகம் செய்து விட்டோம் என எண்ணித் தவிக்கின்றான்.


அறியாமையின் (அஞ்ஞானத்தின்)பார்வையும் இஸ்லாத்தின் பார்வையும்

இஸ்லாம் ஒவ்வொரு விவகாரத்திலும் வாழ்வின் ஒவ்வொரு பிரச்னையிலும் மிகவும் தெளிவான வழிகாட்டுதலை வழங்கியிருக்கின்றது. இதனால் இந்த உலகில் பிடித்துத்தள்ளி அமிழ்த்திடும் பல சிக்கல்களில் முஸ்லிம்கள் சிக்கிக் கொள்ளவே இல்லை. அவர்கள் இவை ஒவ்வொன்றிலும் தெளிந்த சிந்தனையும் சீரான பார்வையும் கொண்டவர்களாக இருந்தார்கள். ஜாஹிலிய்யா என்ற மௌட்டிகங்களின் மூடப்பழக்கவழக்கங்களின் பளபளப்புக்கள் அவர்களைக் கொஞ்சமும் தடம்பிறழச் செய்ததில்லை. இதுவே அந்த முதல் இஸ்லாமியத் தலைமுறையின் பார்வையும் போக்குமாக இருந்தது. அறியாமை என்பதும் மூடத்தனமான பழக்கவழக்கங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தோடு கட்டுண்டவை அல்ல. மனித இனம் நேரான வாழ்க்கை நெறியாம் இஸ்லாத்திலிருந்து விடுபட்டு விலகிச் சென்றிட சென்றிட அறியாமை இந்த மனித இனத்தை மீண்டும் வந்து மூடிக் கொள்ளும். இதுதான் வரலாற்றில் அன்று நடந்தது. இன்று நடக்கின்றது. இனிவரும் நாள்களிலும் இதுவே நடக்கும். பகட்டும் பளபளப்பும் நிறைந்த வீண்விரய வாழ்க்கையை அந்த முதல் சமுதாயம் எப்படி எடுத்துக் கொண்டது என்பதற்கோர் வரலாற்று நிகழ்ச்சி இதோ:
அப10 உதுமான் நஹ்தி (அல்லாஹ் அவர்கள் மேல் தன் அருளைப் பொழிவானாக) அவர்கள் பின்வரும் நிகழ்வை அறியத் தருகின்றார்கள். வரலாற்றுச் சிறப்பைத் தனதாக்கிக் கொண்ட ""கதிசிய்யா" போர் இதில் முஸ்லிம்களின் முன்னனி வீரர் முஜிரா பின் ஷோபா (அல்லாஹ் அவர்கள்பால் திருப்தி கொள்வானாக) அவர்கள் ஈரானின் தளபதி ருஸ்தும் முகாமிட்டிருந்த முகாமை நெருங்கி வந்தார்கள். ஆற்றின் பாலத்தை அவர்கள் கடந்ததும் ஈரானின் படைவீரர்கள் அவர்களை எதிர்கொண்டழைத்தார்கள். தங்கள் தளபதியாம் ருஸ்துமோடு பேசும்படி முறையிட்டார்கள். போரில் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த அவர்களிடம் (ருஸ்துமின் வீரர்களிடம்) தோல்வியின் சாயலோ சோகமோ கொஞ்சமும் காணப்படவில்லை. அவர்களின் அணிமணிகளில் ஆடம்பரம் ஆடம்பரமாக வீற்றிருந்தது. முஜிரா(ரலி) முன்னே போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களின் தலைமுடி நான்காக வகுக்கப்பட்டுக் கிடந்தது. எளிமையின் பிரதிநிதியாக ஏற்றமிக்கதொரு கொள்கையின் பிரதிநிதியாக ஆடம்பரத்தின் அவையில் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். சுற்றும் முற்றும் பார்த்தார்கள். விரயம் என்ற சொல்லுக்கு விளக்கம் இனி எங்கேயும் தேடிட வேண்டாம் எனற் அளவுக்கு ஆடம்பரம் அங்கே அரசமைத்துக்கொட்டிக் கிடந்தது. தோல்வியின் எதிர்காலப் பிரதிநிதிகளாய் நின்று கொண்டிருந்த ருஸ்துமின் படை வீரர்களின் ஜொலிப்பில் எந்தக் குறையுமில்லை. வறண்டும் வகுந்தும் கிடந்த முஜிராவின் முடியைப் போலல்லாமல் அந்த வீரர்களின் முடிகளை மூடி மணிமுடிகள் கொலுக்கொண்டிருந்தன். தந்தமும் தங்கமும் அங்கு தங்குதடையின்றி காட்சி தந்தன. நானூறு அடிகள் வரை தரையின் மேல் விரிப்பு விரிந்து கிடந்து ருஸ்துமின் இருக்கைக்கு வழிகாட்டிற்று. முஜிரா(ரலி) அவர்கள் நடந்து ருஸ்துமின் இருக்கையை நெருங்கினார்கள். பொன்னும் மணியும் மின்னும் வைரமும் அணிகலன்களாய் வேய்ந்து ருஸ்துமின் மேனியைத் தகத்தகாயமாகச் சுடர்விடச் செய்து கொண்டிருந்தன. எந்தச் சலனமுமில்லாமல் முஜிரா(ரலி)முன்னே சென்றார்கள். ருஸ்துமின் இருக்கையின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தார்கள். இதைக் கணமும் தாங்கிக் கொள்ள இயலவில்லை ருஸ்துமின் அடியாட்களால். தாவிச் சென்று முஜிரா அவர்களை (அல்லாஹ் அவர்களுக்கு நிறைந்த நற்கூலிகளைத் தந்தருள்வானாக) கீழே இழுத்து இறக்கினார்கள். முஜிரா(ரலி)அவர்கள் ருஸ்துமிடம் இப்படிக் கூறினார்கள். நீங்களெல்லாம் அறிவுடையவர்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் நேரில் பார்த்த போது தான் புரிகின்றது உங்களுக்கும் அறிவுக்கும் தொடர்பு அற்றுப் போயிருக்கின்றது என்று. உங்களைப் போல் அறிவற்றவர்கள் யாருமில்லை. நாங்கள் உங்களைப் போல் வர்க்கப் பேதங்கள் பாராட்டுவதில்லை. நாங்கள் எங்களில் யாரையும் அடிமைகளாய் நடத்துவதில்லை. ஒருவர் எங்கள் மேல் போர்தொடுத்து அவரை நாங்கள் கைது செய்தாலொழிய நாங்கள் யாரையும் கைதிகளைப் போல் நடத்த மாட்டோம். எங்களைச் சார்ந்தவர்களிடம் நாங்கள் அன்பும் அனுதாபமும் காட்டுவது போல் நீங்களும் காட்டுவீர்கள் என எண்ணினேன். ஆனால் நீங்களோ உங்களைச் சார்ந்தவர்களையே அடிமைகளாக வைத்து ஆட்சிச் செலுத்துகின்றீர்கள். இது தான் உங்கள் பண்பாடு என்றால் நீங்கள் முன்னாலேயே எனக்குச் சொல்லி அனுப்பி இருக்கலாம். நாங்கள் ஆண்டான் என்று சிலரையும் அடிமைகளாய் சிலரையும் வைத்திருக்கின்றோம் எனத் தெரிவித்திருக்கலாம். என்னிடம் இப்படி நடந்து கொள்வதை விட அது உங்களுக்குச் சிறந்ததாய் இருந்திருக்கும். நான் நானாக விரும்பி உங்களைப் பார்க்க வரவில்லை. உங்களால் அழைக்கப்பட்டே உங்களிடம் வந்திருக்கிறேன். இங்கு வந்த பின்னர் தான் தெரிந்து கொண்டேன் நீ;ங்கள் முழுமையானதொரு மூடத்தனத்தில் மூழ்கிக்கிடக்கின்றீர்கள் என்பதை இப்படி ஆடம்பரமாய் தன்னை ஆக்கிக் கொண்டவர்களும் அடிமையாய் சிலர் தனக்கு குற்றேவல் புரிய தாங்கள் மமதையில் மிதக்க வேண்டும் என்ற மனநிலையைப் பெற்றவர்களும் வென்றதாய் வரலாறு இல்லை. உங்கள் மனநிலையே உங்கள் தோல்விக்கு முன்னறிவுப்புச் செய்கின்றது. ஆடம்பரத்தில் உலக சுகங்களில் இத்துணை அழுத்தமான பிடிப்பை வளர்த்துக் கொண்டவர்கள் மரணத்தையும் மறுமை வாழ்க்கையையும் அதிகமாக நேசிக்கும் அல்லாஹ்வின் படையை வெல்ல முடியாது.
இதே ருஸ்துமின் முன்னேதான் கதிசியா போருக்கு முன்னர் ரபிய்யா பின் அம்ர்(அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக) ரபிய்யா பின் அமர்(ரலி) அவர்களை பாரசீகத் தளபதி ருஸ்துமிடம் அவருடைய அழைப்பிற்கிணங்க அனுப்பினார்கள். ருஸ்தும் பாரசீகப் படையின் தளபதியும் ஆட்சியாளரும் ஆவார். ரபிய்யா பின் அமர்(ரலி) அவர்கள் ருஸ்துமின்ன முகாமுக்குள் நுழைந்தார்கள். அங்கே பட்டும் பகட்டுக்காக பளபளக்கும் அணிகளும் தொங்கிக் கொண்டிருந்தன. தங்கத்தாலான இருக்கையில் ருஸ்தும் தன்னை அமர்த்திக் கொண்டிருந்தார். அவரது மணிமுடி முத்து பவளம் வைரம் வைடூரியம் ஆகியவற்றில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. ரபிய்யா(ரலி)அவர்கள் நைந்த ஆடையை அணிந்தவர்களாகவும் ஒரு கேடயத்தைக் கையில் கொண்டவர்களாகவும் ஒரு சிறு குதிரையில் உள்ளே நுழைந்தார்கள். உடைவாள் உறையில் இருந்து வெளியே வந்து அவர்களுடைய கைகளுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. போர் ஆயதங்கள் பொருத்தப்பட்டிருந்த மேலாடை ஒன்று அவர்களைப் போர்த்திக் கொண்டிருந்தது. தரையில் விரிக்கப்பட்டிருந்த பட்டுப் பீதாம்பரம் ரபியா(ரலி)அவர்களின் குதிரைக் குளம்பில் பட்டுச் சுருண்டது. சிறிது தூரம் தன் குதிரையில் சென்ற ரபிய்யா(ரலி) அவர்கள் குதிரையை விட்டுக் கீழே இறங்கினார்கள். குதிரையை அங்கே ஜொலித்துக் கொண்டிருந்த விலைமதிப்பற்ற ஓர் அரசணையில் கட்டினார்கள். நிமிர்ந்த நெஞ்சோடும் நேர்கொண்ட பார்வையோடும் ருஸ்துமை நோக்கி நடந்தார்கள். ருஸ்துமின் பணியாட்களாய் நின்று கொண்டிருந்த படைவீரர்கள் உங்கள் ஆயதங்களைக் கீழே போடுங்கள் என்றார்கள். ரபிய்யா (ரலி) அவர்கள் சொன்னார்கள் நான் என் விருப்பப்படி இங்கே வரவில்லை. உங்கள் கோரிக்கையின் கீழ்தான் இங்கே வந்திருக்கின்றேன். நீங்கள் இதை விரும்பவில்லையென்றால் சொல்லி விடுங்கள் திரும்பச் சென்று விடுகின்றேன் என்றார்கள். ருஸ்தும் விடுங்கள் அவர் வரட்டும் என்று தன்னவர்களைப் பார்த்துச் சொன்னார். தொடர்ந்து நடந்தார்கள்.
ரபிய்யா(ரலி) அவர்கள். அவர்களின் கையிலிருந்த வாளை அவர்கள் ஊன்றி நடந்த போது அது தரையை மெத்தையாக ஆக்கிக் கொண்டிருந்த பட்டுப் பீதாம்பரத்தைக் குத்தித் துளையிட்டுவிட்டது. ரபிய்யா(ரலி) அவர்கள் ருஸ்துமின் முன் வந்ததும் ருஸ்தும் கேட்டார். நீங்கள் ஏன் இங்கே (இங்கே என்பதற்கு ஏன் கதிசியாவை நோக்கி வந்தீர்கள்? அல்லது முற்றுகையிட்டீர்கள் என்று பொருள்) வந்தீர்கள். அதற்கு ரபிய்யா அவர்கள் இப்படிப் பதில் சொன்னார்கள். மனிதர்கள் மனிதர்களுகக்கு அடிபணிவதிலிருந்து அவர்களை விடுவித்து மனிதர்களை இறைவனுக்கு மட்டுமே அடிபணிபவர்களாக ஆ;க்கிட அல்லாஹ் எங்களை அனுப்பினான். மனிதர்களை இந்த உலகின் இடுக்கிலிருந்து விடுவித்து அல்லாஹ்வின் விசாலமான உலகிலுள்ளும் மறுமையின் வெற்றியிலும் இட்டுச் சென்றிட அல்லாஹ் எங்களை அனுப்பினான். அதே போல் அநியாயத்திலிருந்து மனிதர்களை விடுவித்து அல்லாஹ்வின் நீதி கிடைக்க வகை செய்யவும் அல்லாஹ் எங்களை அனுப்பினான். காலங்கள் மாறின நிலைமைகள் திரும்பின. முஸ்லிம்கள் பெற்றிருந்த பெரும் பலத்தை இழந்தார்கள. அவர்கள் வெற்றி கொள்ளப்பட்டார்கள். இத்தனையுமிருந்தாலும் ஒரு முஸ்லிம் தான் நேரான ஒரு கொள்கைக்குச் சொந்தக்காரன் என்ற எண்ணத்தால் உயர்ந்தே நின்றான். அவன் ஈமானில் உயர்ந்து நின்றிடும் போது தன்னை வெற்றி கொண்டவர்களைக் கூட ஓர் உயர்ந்த நிலையிலிருந்தே பார்க்கின்றான். தனக்கு ஏற்பட்டுவிட்ட இந்த நிலைமைகள் மிகவும் தற்காலிகமானவை என்பதை அவன் மனதார நம்புகின்றான். ஒரு நாள் இறைநம்பிக்கை தன்வலிமையை வெளிப்படுத்தி நிலைமைகளைத் தலைகீழாய் மாற்றி வெற்றியையும் தனது மேன்மையையும் நிலைநாட்டிடும். இந்த யதார்த்தத்திலிருந்து யாருக்கும் விடுதலை இல்லை. மரணமே அவனை ஆட்கொள்ள வந்தாலும் அவன் தன் கொள்கையில் கிஞ்சிற்றும் விட்டுக் கொடுக்க மாட்டான். மரணம் எல்லோருக்கும் வருவதே அந்த மரணம் ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு இறைவனின் வழியில் தன்னைத் தந்துவிடுவது என்ற அளவில் வருகின்றது. இறைநம்பிக்கையாளன் அந்த இறைவனின் வழியில் தன்னைத்தந்து விட்டு தன் உயிரைத் தந்துவிட்டு சுவர்க்கத்தை நோக்கிப் பீடுநடைபோடுகின்றான். அவனை இந்த உலகில் வென்றோம் என எண்ணுபவர்கள் இறப்பிற்குப்பின் வரும் அந்த வாழ்க்கையில் நரக நெருப்பை நோக்கி இழுத்துச் செல்லப்படுவார்கள். இத்துணைப் பெரியதொரு மாறுபாடும் வேறுபாடும் இறைநம்பிக்கையாளனுக்கும் அந்த இறைவனை ஏற்றுக் கொள்ளாதவனுக்கும் இடையில் இருக்கின்றது. கொள்கையால் உயர்ந்த இலட்சியங்களால் உயர்ந்து நிற்கும் அந்த இறைநம்பிக்கையாளன் தன் இறைவனின் செய்தியைச் செவிமடுக்கவே செய்கின்றான்:
(நபியே) நிராகரிப்போர் (ஆடம்பரமான) நகரங்களில் திரிந்து கொண்டிருப்பது உம்மை மயக்கிவிட வேண்டாம். இஃது அற்ப சுகமாகும். அதற்குப் பின்னர் அவர்கள் புகுமிடம் நரகந்தான். அது தங்குமிடங்களில் மிகக்கெட்டது. ஆயினும் எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளுண்டு. அவற்றில் அவர்கள் அல்லாஹ்வின் விருந்தினராக என்றென்றுமே தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும் (அல்குர்ஆன் 3:196-198)
அறியாமை ஆடம்பரத்தில் திளைக்கின்றது. ஆடம்பரத்தில் மட்டுமல்ல ஆணவத்திலும் மூழ்குகின்றது. கர்ச்சிக்கின்றுது கனைக்கின்றது இல்லாததையும் பொல்லாததையும் ஓங்கி முழங்குகின்றது. இப்படியெல்லாம் கர்ச்சித்து கனைத்துக் காட்டி ஓங்கி முழங்கி ஒப்பாரிவைத்து எல்லோரையும் ஒருவித கவர்ச்சியிலும் மாயையிலும் சிக்கிடச் செய்கின்றது அறியாமை. இப்படியெல்லாம் ஆர்ப்பரித்து விடுவதால் அது உண்மையாகிவிட்டது. இன்னும் சொல்வதானால் தன்னுடைய உண்மையான இயல்பை மறைத்துவிடவே இப்படியெல்லாம் ஆர்ப்பரிக்கின்றது அறியாமை. நாம் மக்களை ஏமாற்றவே இப்படிச் செய்கின்றோம் என்பதை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதும் இந்த ஆரவாரங்களில் அமிழ்ந்து கிடக்கும் இன்னொரு பொருள். இந்த ஆரவாரங்கள் ஆர்ப்பரிப்புகள் எல்லாம் அல்லாஹ்வையும் அறுதி நாளையும் ஈமான் கொண்டு வாழ்ந்திடும் முஸ்லிமையும் வந்து தாக்குகின்றன. ஆனால் அவன் இந்தக் கவர்ச்சிகளில் வீழ்ந்திடுவதே இல்லை. ஏமாந்து விடுவதுமில்லை. இவற்றிற்கு அப்பால் நின்று அனுதாபத்தோடு இந்த அறியாமையைப் பார்க்கின்றான். உண்மை இஸ்லாம் இந்த மக்களைச் சென்று சேர்ந்திட என்ன செய்திட வேண்டும் என ஆலோசிக்கின்றான் செயற்களத்தில் குதிக்கின்றான். அறியாமையின் கவர்ச்சிகள் அவனை அணுவளவும் அசைத்திடுவதில்லை. அறியாமை காமத்தில் கரை புரண்டோடலாம். காமக்களியாட்டங்களையும் காதல் சல்லாபங்களையும் அது காட்சிக்குத் தந்து மக்களின் மதியை மயக்கிடலாம். மதுவையும் மக்களுக்குத் தந்து அவர்களை விலங்குகளாக ஆக்கி வேடிக்கைப் பார்க்கலாம் அறியாமை. இப்படியெல்லாம் மனிதர்களை விலங்கினும் கீழாய்த் தாழ்த்திவிட்டு இவற்றை மனித உரிமைகள் எனப் பறையறிவிக்கலாம். மக்களின் மதியை மயக்கி அதை மனம் போல் வாழ்க்கையை அனுபவிக்க தந்த சுதந்திரம் எனப் பேசிக் கொள்ளலாம். இவற்றையெல்லாம் உரிமைகள் என்றோ சுதந்திரம் என்றோ கருதுவதில்லை ஈமான் என்ற இறைநம்பிக்கை கொண்ட முஸ்லிம். என்றோ எங்கோ வரப்போகும் வாழ்க்கையை நம்பி இங்கே இன்றே கிடைக்கும் சுகங்களை கோட்டை விடாதே என இந்த அறியாமையின் பிரதிநிதிகள் அவனை ஏளனம் செய்யலாம் ஏகடியம் பேசலாம். ஆனாலும் அவன் நிலைகுலையா குணங்களின் குன்றாய் நின்று கொண்டிருப்பான். இப்படி அவனை எள்ளி நகையாடுவோருக்கு இதோ இறைவனே பதில் தருகின்றான் நபி நூஹ்(அலை) அவர்கள் வழியாக அந்தப் பதிலை அல்லாஹ் இப்படித்தன் அருள் மறையில் குறிப்பிடுகின்றான்:
அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த சமயத்தில் அவருடைய சமூக்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்ற போதெல்லாம் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால் நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பது போலவே (அதி சீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம் என்று கூறினார் (அல்குர்ஆன் 11:38)
அல்லாஹ்வின் நல்லடியான் அறியாமையின் முடிவையும் இறைவனை நம்பி அந்த நம்பிக்கையில் நிலைத்து நின்றவர்களின் முடிவையும் சபலங்கள் ஏதமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) இறைநம்பிக்கையாளர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின் சமீபமாகச் சென்றால் (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக் கொள்கின்றனர். (அவர்களை விட்டுவிலகித்) தங்கள் குடும்பத்தார்களிடம் சென்று விட்டபோதிலும் இவர்களுடைய விஷயங்களில் (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர். (வழியில்) அவர்கள் இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள் என்றும் கூறுகின்றனர். (விசுவாசிகளைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே எனினும் (மறுமை நாளாகிய) இன்றைய தினம் விசுவாசங் கொண்டவர்கள் அந்நிராகரிப்போரைக் கண்டு சிரிக்கின்றனர். (சுவனபதியிலுள்ள) சிறந்த ஆசனங்கள் மீது (சாய்ந்த வண்ணம்) இருந்து (கொண்டு இந்தப் பாவிகள் படும் வேதனையைப்) பார்த்துக் கொண்டு நிராகரித்த இவர்களுக்கு இவர்களுடைய செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்பர்) (அல்குர்ஆன் 83:29-36)
இதற்கு முன்னால் திருக்குர்ஆன் இறைவனை ஏற்க மறுத்தவர்கள் இறைவனை ஏற்றுக் கொண்டவர்களிடம் என்ன சொன்னார்கள் என்பதைச் சொல்லித்தந்தது:
நிராகரிப்போருக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காண்பிக்கப் பெற்றால் அவர்கள் விசுவாசிகளை நோக்கி நம் இருவகுப்பார்களில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் சபை அழகான தோற்றத்துடனும் இருக்கின்றது என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 19:73)
யார் உயர்ந்தவன் என்பது இங்கே கேள்வி. இறைவனின் தூதர் (ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஓர் அணி இவர்களில் அந்த மக்கத்து மக்களின் தலைவர்களாகக் கருதப்பட்டவர்கள் பணமும் பவிசும் நிறைந்த உல்லாசபுரிகளுக்குச் சொந்தக்காரர்கள் அங்கத்தினர்களாக இருந்தார்கள். இன்னொரு அணி இதில் எந்த வசதியும் வாய்க்கப் பெறாத பஞ்சையர்களே உறுப்பினர்கள். ஆனால் இவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என உளமாற ஏற்று அவர்கள் இட்டக் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றிட காத்துக் கிடந்தவர்கள். நாம் முதலில் குறிப்பிட்ட அணியில் முஹம்மத்(ஸல்) அவர்களை இறைவனின் தூதர் என ஏற்றுக் கொள்ளாதவர்களின் அணியில். அந்த அரபு மக்களிடையே செல்வாக்கைப் பெற்றிருந்த நாசர் பின் ஹாரிஸ் அவர்கள் வீற்றிருந்தார்கள். உமர் பின் ஹிஸ்ஸாம் அவர்களிருந்தார்கள். வலீத் பின் முஜிரா அவர்களிருந்தார்கள். அப10ஸ_ஃப்யான் பின் ஹாரிஸ் அவர்களிருந்தார்கள் இப்படி வளமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்களைச் சொந்தமாகக் கொண்ட அந்த முதல் அணி சிறந்ததா? இல்லை எந்த வசதியுமில்லாத எந்தப் பிடிப்புமில்லாத பிலால்(ரலி) அவர்கள் அம்மார்(ரலி)அவர்கள் ஸ_ஹைப் (ரலி)அவர்கள் ஹப்பாப்(ரலி) அவர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட அணி உயர்ந்ததா? இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் கொண்டுவந்த திருத்தூது பலன்தரும் திருத்தூதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டவர்கள் ஏன் வளங்கள் வாய்க்கப் பெறாத வறிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் தந்த செய்தி பெருமைமிக்கச் செய்தி என்றால் அவர்களைச் சுற்றி அந்தச சமுதாயத்தில் மேன்மக்களாகக் கருதப்பட்டவர்கள் ஏன் வரவில்லை? நேர்வழி பெற்றோர் என உவகை கொள்ளும் இந்த மக்கள் சந்திக்க இறைவனின் திருத்தூதர் (ஸல்) அவர்களையே அங்கமாகக் கொண்ட இந்தக் குழு கூடிட ஒரு அர்க்கம் (ரலி) அவர்களின் இல்லந்தான் கதி. ஆனால் இந்த இறைவனின் தூதர் (ஸல்) அவர்களை மறுத்த இன்னும் எதிர்த்த அணியோ தன் கூட்டங்களை நடத்த பவிசான சொகுசு பங்களாக்களைக் கைவரப் பெற்றிருந்தது. இப்படி உலகிலிருக்கும் வசதிகளை வைத்து உண்மையையும் பொய்யையும் எடைபோடுபவர்கள் நிச்சயமாக இந்த உலகையும் அதில் கிடைக்கும் வாய்ப்புக்களையும் இறைவனாக ஆக்கிக் கொண்டு இவற்றையே ப10ஜிப்பவர்கள். இவர்களுக்குக் கண்முன்னாலே காணும் வளங்களே கடவுள். இவர்களின் கண்களால் இந்தக் கடவுளுக்கு அப்பால் எதையும் காண முடியவில்லையே. இவர்களின் கண்களில் திரைகளில் வீழ்ந்துவிட்டன. ஒருவன் நம்பிக்கை கொள்வதற்கும் கொள்ளாதிருப்பதற்கும் அவன் உலகில் அனுபவிக்கும் சுகங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இறைவனை நம்புவது நம்பாதிருப்பது இந்த உலகப் பகட்டுகளுக்கு அப்பாற்பட்டது. இதுவே இறைவனின் தீர்ப்பு உலகில் செல்வாக்குக் கிடைக்கும் என்பதற்காகவோ உலகில் செல்வமும் வளமும் வந்து சேரும் என்பதற்காகவோ உலகில் அதிகாரமும் பெருமையும் கிடைக்கும் என்பதற்காகவோ யாரும் ஈமான் கொள்ள இறைவனை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஈமான் கொள்வது இறைநம்பிக்கை கொள்வது என்பது இது போன்ற எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் சென்று உண்மையான நம்பிக்கையாக இருந்திட வேண்டும். ஓர் உண்மையைச் சொல்வதானால் ஈமான் கொண்டால் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டால் துண்பங்களைக் கொண்டும் இழப்புகளை ஏற்படுத்தியும் நாம் சோதனைகளுக்குள்ளாக்கப் படுவோம். இதனால் அப்பழுக்கற்ற இறைநம்பிக்கையாக அது இல்லாதிருந்தால் எதிர்பார்ப்புகளைக் கொண்ட ஈமானாக இறை நம்பிக்கையாக அது இருந்தால் அது அதிக நாள்கள் நிலைக்காது. இறைவனின் திருப்தி மகிழ்ச்சி இதனால் மறுமையில் கிடைக்கும் வெற்றி இவற்றால் வந்ததாக இருந்திட வேண்டும் (ஈமான்) இறைநம்பிக்கை. உண்மையான இறைநம்பிக்கையாளன் உலகியல் கவர்ச்சிகளால் உந்தப்படுபவன் அல்ல. அவன் தனது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் மனிதர்களிடமிருந்து பெற்றிடுவதில்லை. அவன் தனது உணர்வை உற்சாகத்தை உத்வேகத்தை அல்லாஹ்விடமிருந்தே பெறுகின்றான். அல்லாஹ்வைக் கொண்டே திருப்தியடைகின்றான். அறியாமை ஜாஹிலிய்யா அதிகாரம் கைவரப் பெற்றதாக இருந்திடட்டும். அது தனது மேனாமினுக்கை வெளியே காட்டி காண்போரை கவர்ந்திழுக்கட்டும். அதில் கவரப்பட்டு தங்களை இழந்திடுவோர் அறியாமையின் அணியில் அணி திரளட்டும். இத்தனையுமிருந்தாலும் அது உண்மையை எதுவும் செய்திட முடியாது. அதேபோல் அது எதையும் எதிர்பார்க்காமல் ஆனால் எது வந்தாலும் தாங்கிடுவோம் என வாழ்ந்திடும் இறைநம்பிக்கையாளர்களை எதுவும் செய்திட இயலாது. உண்மையான நம்பிக்கையாளன் உண்மைக்காகப் பொய்யை ஏற்றுக் கொள்ள மாட்டான்.
(அன்றி அவர்கள்) எங்கள் இறைவனே நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய இருதயங்கள் (அதிலிருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் அன்பான அருளையும் உன் புறத்திலிருந்து எங்களுக்கு அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி. எங்கள் இறைவனே நிச்சயமாக நீ ஒரு நாளில் மனிதர்கள் யாவரையும் ஒன்று கூட்டுபவனாக இருக்கின்றாய். அதில் சந்தேகமே இல்லை. நிச்சயமாக அல்லாஹ் வாக்குறதியில் தவறுபவனல்ல. (என்று பிரார்த்திக்கின்றனர்) (அல்குர் ஆன் 3 : 8-9)

No comments:

Post a Comment