தலைகீழ் மாற்றங்கள் அனைத்துத் துறைகளிலும் அவசியம்
இஸ்லத்தை எடுத்துச்சொல்லி முஸ்லிமல்லாதவர்களை நாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தாலும் சரி அல்லது இன்றைய முஸ்லிம் சமுதாயத்தைப் புனரமைத்து ஓர் இஸ்லாமிய அரசை நிலைநாட்டிட முயன்றாலும் சரி நாம் ஓர் அடிப்படை உண்மையை மனதில் நிரந்தரமாக நிறுத்திட வேண்டும். இந்த அடிப்படை உண்மையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். இஸ்லாம் வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் தெளிவாகவும் விரிவாகவும் வழிகாட்டியிருக்கின்றது. இஸ்லாத்தின் வழிகாட்டுதல்கள் நிரந்தரமானவை நிறைவானவை. இந்த உண்மைகளை ஊர்ஜிதம் செய்திடும் பென்னம் பெரியதோர் வரலாறும் இஸ்லாத்திற்கு உண்டு. அனைத்தையும் படைத்த இறைவனிடமிருந்து வந்த இந்த வழிகாட்டுதல் ஏனைய எல்லா வாழ்க்கை நெறிகளிலிருந்தும் மாறுப்பட்டது. வேறுபட்டது. இஸ்லாம் வெறும் வழிகாட்டுதலாக மட்டும் இருந்திடவில்லை. அது வாழ்ந்து காட்டப்பட்ட வாழ்க்கை முறையும் கூட. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மார்க்கம் இந்த வாழ்க்கை நெறி நீண்ட நெடிய இந்த தொருகாலம் வாழ்ந்து காட்டப்பட்டது. இதனாலேயே அந்தச் சமுதாயம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதோர் சமுதாயமாகவும் ஆனது. இறைவன் தன் இறுதி வழிகாட்டுதலாம் திருக்குர்ஆனில் இப்படி இதைச் சுட்டிக்காட்டுகின்றான்:
(விசுவாசிகளே) நன்மையான காரியங்களை (ச் செய்யும் படி மனிதர்களை) ஏவி பாபமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள் தாம் மனிதர்களில் தோன்றிய சமுதாயங்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள் (அல்குர்ஆன் 3:110)
அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை அப்படியே வாழ்ந்து காட்டிய இந்தச் சமுதாயத்திடம் அதிகாரமும் ஆட்சியும் ஒப்படைக்கப்பட்டது. அதுபோது இந்தச் சமுதயாம் இப்படி நடந்தது. இனிவரும் நாளிலும் அதன் கைகளில் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் அப்போதும் அது இப்படியே நடக்கும் அது எப்படி நடந்தது? நடக்கும்?
அவர்கள் எத்தகையோர் என்றால் நாம் அவர்களுக்குப் ப10மியில் ஆதிக்கம் கொடுத்தால் அவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுகுவார்கள் ஜகாத்தும் கொடுத்து வருவார்கள். நன்மையான காரியங்களைக் கொண்டே பாபமான காரியங்களைத் தடைசெய்வார்கள். (அல்குர்ஆன் 22:41)
இந்த நீதிமிக்க சமுதாயம் இறைவனைத்தவிர வேறுயாரையும் வணங்காத வழிபடாத வாழ்க்கைபடாத சமுதாயம் ஏனைய சமுதாயங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று உண்மையும் சத்தியமும் அதன்வழிமுறை. இந்தக் கொள்கை இந்த வாழ்க்கை நெறி ஏனைய ஜாஹிலிய்ய சமுதாயங்களோடு எள்ளளவு கூட சமரசம் செய்திட விரும்பவில்லை. அதனுடைய இயல்பால் அது சமரசம் செய்து கொள்ளவும் முடியாது. இந்தக் கொள்கை வழிவந்த அந்த முதல் சமுதாயம் மௌட்டீகங்களின் காட்டுமிராண்டித்தனங்களை எதிர் கொண்டு எண்ணற்ற இழப்புகளை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் அது தன் கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. இப்போது வாழும் சமுதாயமும் அப்படிக் கொள்கைகளை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. அல்லது சமரசம் செய்து கொள்ளவும் போவதில்லை. இனிவரும் சமுதாயங்களும் அப்படி விட்டுக்கொடுக்கப் போவதில்லை. சமரசம் செய்து கொள்ளப் போவதுமில்லை. இஸ்லாம் கொள்கையளவிலும் சரி நடைமுறை வாழ்க்கையிலும் சரி ஜாஹிலிய்யா என்ற மௌட்டீக மூடக் கொள்கைகளோடு சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. இஸ்லாம் என்பது அல்லாஹ்வை அனைத்தையும் படைத்தவனை வழிப்படுவது ஜாஹிலிய்யா என்பது மனிதன் மனிதனை வழிபடுவது மனிதன் மனிதனுக்கு அடிமைப்படுவது. ஆகவே தான் இஸ்லாம் தந்த ஜாஹிலிய்யாவோடு பேரம்பேசி சமரசம் செய்து தன்னைத் தாழ்த்திக் கொள்வதில்லை. கொள்கையளவிலோ கோட்பாடுகளின் அளவிலோ நடைமுறை வாழ்க்கையிலோ சத்திய இஸ்லாம் ஜாஹிலிய்யாவோடு வாழாது வாழமுடியாது. ஒன்றிலோ சத்தியமாம் வாய்மையாம் இஸ்லாம் வாழும் அல்லது அசத்தியமாம் ஜாஹிலிய்யா வாழும். பாதி இஸ்லாம் பாதி ஜாஹிலிய்யயா என்றொரு நிலையை ஏற்றுக்கொள்ள இயலாது. இந்நிலையில் இஸ்லாம் தெளிவாகக் கூறுகின்றது. உண்மையென்பது ஒன்றே ஒன்றுதான். அதைக் கூறுபோட்டிடக்கூடாது. உண்மையல்லாதவை பொய்யாகவே இருந்திடமுடியும். உண்மையோடு பொய்யும் தோளோடுதோளாய் நின்று வாழ்ந்திடும் என்பது முடியாத ஒன்று. அதிகாரம் அல்லாஹ்விடம் இருக்கவேண்டும் அல்லது மௌட்டீகத்திடம் இருந்திட வேண்டும். அதாவது அல்லாஹ்வின் வழிகாட்டுதல்கள் வாழும் அல்லது மனித மூளைகளில் உதித்த குளறுபடிகள் குடியிருக்கும். இறைவன் எச்சரிக்கின்றான்:
(நபியே) அல்லாஹ் அருளியவைகளைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றாதீர். அன்றி உமக்கு அல்லாஹ் அருளியவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பிவிடாத படியும் நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாயிரும் (அல்குர்ஆன் 5:49)
எனவே (நபியே) அந்த உண்மையான மார்க்கத்தின் அளவில் அவர்களை நீர் அழையும். உமக்கு ஏவப்பட்ட பிரகாரம் நீர் உறுதியாக இரும். அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். (அல்குர்;ஆன் 42:15)
உமக்கவர்கள் பதில் சொல்லாவிட்டால் நிச்சயமாக அவர்கள் தங்கள் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்களென்று உறுதியாக நீர் அறிந்து கொள்ளும். அல்லாஹ்வுடைய நேரான வழியையன்றி தன்னுடைய மன இச்சைகளைப் பின்பற்றுவனைவிட வழி கெட்டவன் எவனுமுண்டா? (அல்குர்ஆன் 28:50)
(நபியே நேரான) மார்க்கத்தின் ஒரு வழியில் தான் நாம் உம்மை ஆக்கி இருக்கின்றோம். ஆகவே அதனையே நீர் பின்பற்றுவீராக அறிவற்றவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு விரோதமாக இவர்கள் உமக்கு யாதோர் உதவியும் செய்திட முடியாது. நிச்சயமாக அக்கிரமக்காரர்களுள் சிலர் அவர்களில் சிலருக்குத்தான் நண்பர்கள். அல்லாஹ்வே பயபக்தியுடையோருக்கு நண்பனாவான். (அல்குர்ஆன் 45:18, 19)
மௌட்டீகக் காலத்துச் சட்டங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? உறுதியாக நம்பிக்கைக் கொண்ட மக்களுக்குத் தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார்? (அல்குர்ஆன் 5:50)
இந்த இறைவசனங்கள ஓர் யதார்த்தத்தை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. அதாவது இரண்டு வழிகளே உள்ளன. அங்கு மூன்றாவது ஒருவழியென்பது இல்லை. ஒன்றிலோ அல்லாஹ்வுக்கும் அவனது திருத்தூதருக்கும் வழிப்பட்டு நடக்கவேண்டும். அல்லது மௌட்டீகக் கொள்கைகளைப் (ஜாஹிலிய்யாவைப்) பின்பற்றி நடந்திட வேண்டும். அல்லாஹ் வழங்கியதைக் கொண்டு மனிதர்கள் தங்கள் வழக்குகளில் தீர்வைத்தேடிட வேண்டும். இல்லையேல் மனிதர்களின் விருப்பங்களையே தீர்வாகப் பெற்றிடவேண்டும். இதில் அல்லாஹ்வின் வழியில் ஒருகால், ஜாஹிலிய்யாவின் வழியில் ஒருகால் என்பதற்கு பேச்சே இல்லை. இதில் இஸ்லாத்தின் மிக முக்கியமான பணி என்னவெனில் இந்த மௌட்டீகங்கள் அஞ்ஞானங்கள் ஆட்சி செய்வதை மனிதர்களை வழிநடத்துவதைத் தடுத்திட வேண்டும் என்பதே. இந்த மௌட்டீகங்கள் மனிதர்களை வழிநடத்துவதைத் தடுத்து ஆட்சியும் அதிகாரமும் இறைவழியில் இறைவனின் வழிகாட்டுதலிடம் வருமாறு செய்திட வேண்டும். இப்படிச் செய்திடுவதன் நோக்கம் மனிதர்களுக்கு அல்லாஹ் அருளிச் செய்த நேரிய வழிகாட்டுதலின் நன்மைகளும் பலன்களும் நீதியும் கிடைத்திட வேண்டும் என்பதே. இதனால் மனிதன் தன் இயல்போடும் தன்னைச் சுற்றியிலிருக்கும் இயற்கையோடும் இயைந்ததோர் வாழ்க்கையை வாழ்ந்திட முடிகின்றது. இறைவனின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திட வேண்டும் என்ற நிலை அவனுக்குக் கிடைத்துவிட்டால் அவன் தன்னைப் போன்ற மனிதர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்திட வேண்டியதில்லை.
இதை ரபாய் பின் அம்ர்(ரலி) அவர்கள் பாரசீக படைதளபதி ருஸ்தும் அவர்களிடம் மிக அழகாக எடுத்துக் கூறினார்கள். ருஸ்தும் கேட்டார் :
நீங்கள் இங்கே ஏன் வந்தீர்;கள்? ரபாய் அவர்கள் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக) பதில் சொன்னார்கள். மனிதர்களுக்கு அடிபணிவதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்வுக்கு அடிபணிவதை விரும்பும் மனிதர்களை விடுவிக்க அல்லாஹ் எங்களை அனுப்பினான். மிகவும் குறுகலான கொள்கைகளிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் விசாலமான வாழ்க்கை நெறிக்குள் புகவிரும்புவோருக்கு உதவி செய்யவே நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம். அத்தோடு அவர்களுக்கு இறப்பிற்குப் பின்வரும் மறுஉலக வாழ்க்கையிலும் வெற்றியைப் பெற்றுத் தருகின்றோம். அநீதிகளிலிருந்து மனிதர்களைக் காத்து அல்லாஹ்வின் நீதி கிடைக்கச் செய்திட நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம். மனிதர்களின் ஆசைகள்: அந்த ஆசைகளை நிறைவு செய்வதற்கு அவன் தனக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் வாழ்க்கைப் போக்கு பழக்க வழக்கங்கள் பாரம்பரிய பண்பாடுகள் இவற்றிற்குத் துணையாக நின்றிட அருளப்பட்ட மார்க்கமல்ல இஸ்லாம். இவற்றையெல்லாம் மாற்றிவிட்டு அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை வாழ்க்கை நியதிகளை நீதியை நிலைநாட்ட வந்த அறுதி இறைநெறியே இஸ்லாம். சிலர் இப்படியொரு வாதத்தை அண்மைகாலந்தொட்டே பேசிவருகிறார்கள். அதாவது ஜாஹிலிய்யாவின் அஞ்ஞானத்தின் பல்வேறு கொள்கைகளும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களை ஒத்திருக்கின்றனவே என்பதுதான். இல்லை நிச்சயமாக இல்லை அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களின் வேர் வேறு. அஞ்ஞானத்தின் வேர்கள் வேறு. இவை இரண்டும் ஒன்றாக மாட்டா இறைமறையாம் திருமறை இதனை இப்படித் தெளிவுபடுத்துகின்றது.
(ஒரே விதமான மழை பெய்த போதிலும்) வளமான ப10மி தன் இறைவனின் கட்டளையைக் கண்டபோது தனது புற்ப10ண்டுகளை வெளிப்படுத்துகின்றது. எனினும் கெட்ட(களர்)ப10மியிலோ வெகு சொற்பமேயன்றி முளைப்பதில்லை. நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறு பலவகையிலும் (நம்முடைய) வசனங்களை விவரிக்கின்றோம். (அல்குர்ஆன் 7:58)
அஞ்ஞானம் அதாவது இறைவனின் கொள்கைகளுக்கு எதிரானவை குழப்பங்கள் நிறைந்தவை. அவை ஒரு மனிதனின அல்லது குறிப்பிட்ட மனிதர்களின் அல்லது குறிப்பிட்டக் கோத்திரத்தாரின் அல்லது குறிப்பிட்டக் குலத்தாரின் நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டவை. இதற்கு நேர் எதிராக இஸ்லாம் எல்லா மக்களின் நலவாழ்வையும் ஈடேற்றத்தையும் இலட்சியமாகக் கொண்டது. அனைவருக்கும் நீதியைத் தருவது. ஆதனால் நிரந்தர நிம்மதியைத்தருவது. இவையெல்லாம் இஸ்லாத்திற்கும் அதற்கு எதிரான ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞானத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகளில் சில. இறைவனின் நேரான சீரான வழிகாட்டுதலாம் இஸ்லாத்தையும் அதன் நிரந்தர வைரியான ஜாஹிலிய்யாவையும் இணைத்து ஒரு வாழ்க்கை நெறியை வகுத்திட இயலாது. அப்படியே இயன்றாலும் இறைவன் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அதனை முற்றாக நிராகரித்து விடுகின்றான். இறைவன் தன்னோடு யாரையும் எதையும் எந்த நிலையிலும் இணையாக வைத்திடுவதை விரும்பிடவில்லை. அவன் தான் மனிதர்களுக்குத் தேர்ந்தெடுத்து வழங்கிய வாழ்க்கை முறைகளோடு வேறு வாழ்க்கை நெறிகளை விரவிடுவதை அல்லது இணையாக ஆக்கிவிடுவதை விரும்புவதில்லை. இறைவனின் அப்பழுக்கற்ற வழிகாட்டுதல்களோடு வேற்று வாழ்க்கை வழிகளை இணைத்துவிட்டால் அவை இணைவைப்பின் மௌட்டீகத்தின் வழிகாட்டுதலே என்பதை இறைவன் மிகவும் தௌ;ளத் தெளிவாக விளக்கிவிட்டான். இஸ்லாத்தை நாம் மக்களிடம் விளக்கிச் சொல்லிடும் போது இவற்றைத் தெளிவாக விளக்கிட வேண்டும். இவற்றை ஆழமாக மக்களின் மனதில் பதித்திட வேண்டும். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பது, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை வாழ்க்கை நெறிகளையும் அத்தனை வழக்கங்களையும் அத்தனைப் பழக்கங்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் நம்மிடமிருந்து கெல்லியெறிந்திட வேண்டும். இஸ்லாமிய வாழ்க்கை நெறியோடு முழுமையாக நம்மைப் பிணைத்திட வேண்டும் என்று பொருள்படும். இதே போல் இஸ்லாத்திற்கு அந்நியமான வேற்று வாழ்க்கை நடைமுறைகள் எத்துணை கவர்ச்சியோடும் நம்மைக் கவ்விக்கொள்ள வந்தாலும் நாம் அவற்றின் வலையிலே வீழ்ந்திடக்கூடாது. அவை முடிவில் குழப்பத்திலேயே வீழ்த்தும். வாழ்வின் எந்தப் பகுதியையும் புறக்கணித்துவிடாமல் இஸ்லாத்தை வாழ்வின் அனைத்துப் பகுதியிலும் புகுத்திட வேண்டும். இப்படிச் செய்திடுவதில் அறிவியல் துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ச்சிகளை நாம் படித்து அல்லாஹ்வின் பாதையில் அவற்றைப் பயன்படுத்திடலாம். இதற்கான உத்திரவாதம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லும்போதும் முஸ்லிம்களிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டிடும் பணியை மேற்கொண்டிடும் போதும் நாம் இவற்றைத் தெளிவாக மக்களின் மனதில் பதியவைத்திட வேண்டும். இப்படி மக்களைத் தெளிவுபடுத்திடும் போது நாம் உண்மையின் பக்கம் உண்மையான இறைவனின் பக்கம் சத்தியத்தின் பக்கம் நீதியின் பக்கம் நிற்கின்றோம் என்பதை உணர்வோம். இந்த உணர்வு நம்முள் ஒரு பெரும் பலத்தையும் நெஞ்சுரத்தையும் தருவதை நாம் உணர்வோம். இந்நெஞ்சுரமே நம்மைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிட வகைசெய்யும். இஸ்லாத்தை வளைத்தும் நெளித்தும் நாம் மக்களிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். கேட்போரின் விருப்பத்திற்குத் தகுந்தாற்போல் நாம் இஸ்லாத்தை ஊட்டிவிடவேண்டும் என்பதற்காக நேரான இந்த மார்க்கத்தைத் திரிக்க வேண்டாம். சொல்வதை நேரடியாக தெளிவாகச் சொல்லிவிடுவோம். இதில் கொஞ்சமும் தயக்கம் வேண்டாம். மனிதர்களே நீங்கள் மூழ்கிக்கிடக்கும் இந்த அறியாமை உங்களைத் தூய்மையற்றவர்களாகவும் நேர்மையற்றவர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றது. இறைவன் உங்களைத் தூய்மைப்படுத்த விரும்புகின்றான். இறைவன் உங்களை நேர்மையாளர்களாக ஆக்கிட விரும்புகின்றான். நீங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழக்கங்கள் உங்களைச் சேற்றில் தள்ளிவிட்டன. அல்லாஹ் உங்களை கழுவித்தூய்மைப்படுத்த விரும்புகின்றான். நீங்கள் கீழானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். இறைவன் உங்களை உயர்ந்ததொரு வாழ்க்கை நெறியின் பக்கம் அழைக்கின்றான். அநியாயமும் அட்டூழியமும் நிறைந்த ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அல்லாஹ் உங்களை இவற்றிலிருந்து விடுவித்து நீதியும் நிம்மதியும் அமைதியும் நிறைந்ததோர் வாழ்க்கையின் பக்கம் அழைக்கின்றான். இரக்கம் என்பதை எடுத்தெறிந்து விட்ட ஆட்சியாளர்களின் கைகளில் நீங்கள் சிக்கியிருக்கின்றீர்கள். அல்லாஹ் உங்களை அன்பு கருணை என்பவற்றைக் கொண்டு அரவணைக்க விரும்புகின்றான். அதற்காகவே அவனின் வழி காட்டுதல்களின் பக்கம் அழைக்கின்றான். இஸ்லாம் உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தையும் அதன்மூலம் உங்கள் வாழ்க்கையின் போக்கையும் மாற்றியமைத்திடும். ஒரு முறை இந்த மாற்றங்களுக்கு உட்பட்ட பிறகு நீங்கள் நெளிந்து கொண்டிருந்த பழைய வாழ்க்கை பாழானது என்பதை உணர்வீர்கள். மேற்கிலும் கிழக்கிலும் கோலோச்சும் கொள்கைகளும் அந்தக் கொள்கைகள் ஏற்படுத்திவரும் குளறுபடிகளும் உங்களுக்குப் புரியும் அந்நிலையில் நீங்கள் அவற்றைப் போற்றமாட்டீர்கள் தூற்றுவீர்கள். ஒருமுறை இந்த உண்மை நெறியாம் அல்லாஹ்வின் வழிகாட்டுதலாம் இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டீர்கள் என்றால், இன்று உலகில் உலாவரும் கொள்கைகளும் கோட்பாடுகளும் எந்த அளவுக்கு அறிவீனமான அபத்தங்கள் என்பதை யாருடைய உதவியுமின்றிக் கண்ணெதிரே கண்டுகொள்வீர்;கள். இன்று நீங்கள் வீழ்ந்திருக்கும் அதலபாதாளத்தில் இருந்துகொண்டு உங்களைப் படைத்த இறைவனின் வாழ்க்கை நெறியின் உயர்வை உங்களால் கண்டு கொள்ள இயலவில்லை. இஸ்லாத்தின் எதிரிகள் இந்த உயர்ந்த வாழ்க்கை நெறியை நிலைநாட்டவிடாமல் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றார்கள். இதன்மூலம் அதன் அறிவுமிக்க வழிகாட்டுதலின் வெளிச்சங்களை நீங்கள் நடைமுறை வாழ்க்கையில் கண்டுகொள்ள முடியாமல் தடுத்துவிட்டார்கள். இப்படி மகத்தான இந்த வாழ்க்கை நெறியை மக்களின் கண்களிலிருந்து மறைத்துக் கொண்டிருக்கும் மனித இனத்தின் இந்த எதிரிகள் ஒன்றாய் ஒரே முகமாய் இணைந்:து நிற்கின்றார்கள். எனினும் அல்லாஹ்வின் அளப்பெரிய கருணையினால் இந்த மார்க்கம் எங்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அருள்மறையாம் திருமறை இதனை விளம்பிக் கொண்டே இருக்கின்றது. இந்தக் கொள்கைகள் இந்த வாழ்க்கை நெறி மீண்டும நிலைநாட்டப்படும என்பதை நாங்கள் எந்த ஐயமுமின்றி நம்பகின்றோம். இப்படித் தெளிவாகவும் தீர்க்கமாகவும் நாம் இஸ்லாத்தை மக்களிடம் எடுத்துச்சொல்லிட வேண்டும். இதுதான் சத்தியம். இஸ்லாம் அதன் ஆரம்ப நாள்களில் எந்த ஒளிவும் மறைவுமின்றி தெளிவாகத்தான் தன் திருத்தூதைச் சமர்ப்பித்தது. அரேபியாவில் பாரசீகத்தில் ரோம் நாட்டில் இப்படி எந்த நாட்டில் அது பிரவேசித்த போதும் இஸ்லாத்தின் செய்தி பட்டவர்த்தனமாக அந்த மக்களுக்குப் படும்படியே சமர்ப்பிக்கப்பட்டது. இஸ்லாம் எந்த நிலையிலும் மக்களைத் திருப்திப்படுத்திட வேண்டும் என்பதற்காக தன்னைத் தாழ்த்திக் கொண்டதுமில்லை. மக்கள் மூழ்கிக்கிடந்த ஜாஹிலிய்யாவோடு சமரசம் செய்து கொண்துமில்லை. ஆனால் இன்று சிலர் எடுபடும் வகையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லுகின்றோம் என்ற மேதாவித்தனத்தில் இஸ்லாத்தை ஏனைய மௌட்டிகக் கொள்கைகளோடு ஒப்பிட்டுக் கீழே இறக்கி விடுகின்றார்கள். இப்படித்தான் இவர்கள் இஸ்லாமிய ஜனநாயகம் இஸ்லாமியப் பொதுவுடைமை என்றெல்லாம் புதிய இசங்களை விற்பனை செய்யப் புறப்பட்டு வந்திருக்கின்றார்கள். இந்த இஸ்லாமியப் பேரறிஞர்கள்(?) இப்படியொரு புரட்சி முறையை ஊரெல்லாம் வியாபாரம் செய்து வருகின்றார்கள். இன்றைக்கு உலக அரங்கில் உலாவரும் பொருளாதார முறையைச் சற்றே செப்பனிட்டால் அது இஸ்லாமியப் பொருளாதாரமாகி விடுமாம். ஆதே போல் இன்றைய அரசியலை அணு அளவே அசைத்து நிறுத்திவிட்டால் அது இஸ்லாத்தால் அங்கீகரிக்கப்பட்டு விடுமாம். இன்னும் இன்றைய நீதித்துறையை ஒருமுறைத் தொட்டுத் திருப்பிவிட்டால் அது இஸ்லாமிய நீதி முறையாகி விடுமாம் பிதற்றுகிறார்கள் இவர்கள். இப்படியெல்லாம் இவர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்து புரட்சி வழிகளைக் கண்டுபிடித்து மக்களை மகிழ்சிப்படுத்தி இஸ்லாத்தைப் பரப்பி நிலைநாட்டி விடுவார்களாம்.
ஆனால் உண்மையும் நிஜமான நடைமுறையும் வேறாக இருந்தன. இன்றைய ஜாஹிலிய்யா சமுதாயங்கள் தலைகீழானதொரு மாற்றத்தின் மூலமே இஸ்லாமிய மயமாகிடும். இங்கே அனைத்தையும் தழுவியதோர் அடிப்படை மாற்றம் தேவை. ஏனெனில் இஸ்லாம் இன்றைய ஜாஹிலிய்யாவின் பொதுவாக அஞ்ஞான சமுதாயங்களுக்கு நேர் எதிரானது மாற்றமானது. மனித இனத்தைக் கவ்வியிருக்கும் பிணிகளைப் போக்கிட அவற்றில் மேலெழுந்தவாரியாக சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் போதாது. இந்தச் சின்ன சின்ன மாற்றங்கள் அவர்களைக் கவ்வியிருக்கும் மௌட்டிகங்களிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்திடப்போதா. இங்கே மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் தளை அறுக்கப்பட்டு அவன் அல்லாஹ்வின் அடியானாக மாறிட வேண்டும். அவன் போற்றிப் புகழும் தலைவர்களையும் தெய்வங்களையும் தூக்கியெறிந்து விட்டு புதியதோர் தலைமையையும் புதியதோர் பாதையையும் ஏற்றிட வேண்டும். படைத்தவற்றின் சட்டங்களுக்குக் கட்டுப்படுவதிலிருந்து முற்றாக வெளியே வந்து படைத்தவன் அருளிய சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். அவன் இதுவரை சிரந்தாழ்த்தி வந்த கட்டளைகளை எடுத்து வீசிவிட்டு இறைவனின் கட்டளைகளை ஏற்றிட சித்தமாய் இருந்திட வேண்டும். இப்படி அனைத்திலும் ஓர் ஒட்டுத்தனமான ஆழமான அடிப்படை மாற்றம் வந்தாக வேண்டும். இது தான் இஸ்லாத்தின் தேவை. இதை நாம் உரக்க முழங்கிச் சொல்லுவோம். இதில் நாம் எந்த ஐயத்தையும் யார் மனதிலும் விட்டு வைக்க விரும்பவில்லை. எடுத்த எடுப்பில் இப்படித் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இஸ்லாத்தை எடுத்து வைப்பதை மக்கள் விரும்பாமலிருக்கலாம். அவர்கள் வெருண்டோடிடவும் செய்யலாம். இதைக்கண்டு அஞ்சவும் செய்யலாம். இவைதான் அன்று இறைவனின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மக்கள் முன்னால் எடுத்து வைத்தபேது நடந்தன. அந்த மக்கள் பெருமானார்(ஸல்) அவர்களை எதிர்த்தார்கள் மறுத்தார்கள். தங்கள் வலிமையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து எதிர்த்தார்கள். ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை அழித்திட தங்களால் முடிந்தவற்றையெல்லாம் செய்தார்கள். பின்னர் என்ன நடந்தது. எந்தச் செய்தியைக் கேட்டு அவர்கள் வெருண்டோடினார்களோ எந்த அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்று முனைப்போடு நின்றார்களோ அந்தச் செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். தங்களால் இயன்றதையெல்லாம் செய்து அந்தச் செய்தியைப் பரப்பினார்கள். நிலைநாட்டினார்கள். அந்த மக்கள் எடுத்த எடுப்பில் எப்படி இந்தச் செய்தியை வரவேற்றார்கள் என்பதை அல்லாஹ் இப்படி அறிவுறுத்துகின்றான்.
வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப் போல் அவர்கள் இருக்கின்றனர். அதுவும் சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடகின்றனர்) (அல்குர்ஆன் 74:50,51)
இப்படி வெருண்டோடியவர்கள் தாம் பின்னர் இந்த இறைவழிகாட்டுதலின் ஒப்பற்ற உறுப்பினர்களாக வாழ்ந்தனர். அன்று இஸ்லாம் தன்னை முதல் முதலாக அறிமுகப்படுத்திக் கொண்ட போது அது எதிர்கொண்ட சூழ்நிலைகள் மிகவும் கர்ணகடூரமானவை. அந்தச் சூழ்நிலைகளுக்குக் கிஞ்சிற்றும் சளைத்தவை அல்ல இன்றைய சூழ்நிலைகள். அன்று அந்தச் சமுதயாத்தை முழுமையாகக் கவ்வியிருந்த ஜாஹிலிய்யாவுக்கு அஞ்ஞான கொள்கைகளுக்கு முற்றிலும் அந்நியாயமான கொள்கையாகவும் அறிமுகமாகாத கொள்கையாகவும் வந்தது இஸ்லாம். இந்த முழு உலகுக்குமே புதியதோர் கொள்கையாக வந்தது இஸ்லாம். அதைச் சுற்றி பலமும் புகழும் பெற்ற பேரரசுகள் தங்கள் ஆணவ ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தன. இஸ்லாத்தின் வருகையை இந்த வல்லரசுகள் தங்களுக்கு நேர் எடுத்து வைக்கப்பட்ட அறைகூவலாகவே கருதின. இத்துணை எதிரான சூழ்நிலைகள் தன்னைச் சுற்றியிருந்த போதும் இஸ்லாத்தின் அழைப்பு கம்பீரமாகவே அந்த மக்களிடையே ஒலித்தது. அது தன்னை அந்த மக்களிடம் அந்த நிலையிலேயே தீர்க்கமாகவும் தெளிவாகவும் அறிமுகப்படுத்தியது. அன்று போல் இன்றும் இன்று போல் என்றும் இந்த அழைப்பு வலிமை மிக்கதாகவும் தெளிவுமிக்கதாகவுமே இருக்கும். இஸ்லாம் தன் இயல்பாலேயே எந்தச் சூழ்நிலையிலும் எடுபடும் பலம் கொண்டது. எத்துணை வலிமைமிக்க எதிர்ப்புகள் எதிரே வந்தாலும் அந்த எதிர்ப்புகள் எப்படித்தான் சுற்றிச் சுற்றித் தாக்கினாலும் இஸ்லாம் அவற்றை எதிர் கொண்டு வென்றிடும் வன்மையும் திண்மையும் கொண்டது. வாய்மையே வடிவாய் அமைந்த இஸ்லாம் வளரும் நாடுகளைப் போல் வளர்ந்த நாடுகளுக்கும் தேவைப்படுகின்றது. இன்னும் சொன்னால் இஸ்லாம் மட்டுமே இந்த வளரும் நாடுகளையும் வளர்ந்த நாடுகளையும் அழிவிலிருந்து காப்பாற்றிடும். இஸ்லாத்தின் இன்னொரு மகிமை என்னவென்றால் இஸ்லாம் அஞ்ஞான கொள்கைகள் அனைத்தையும் எதிர்க்கும் அறைகூவியழைக்கும். ஆனாலும் தனது கொள்கையில் ஒரு எழுத்தைக்கூட மாற்றியமைத்திடாது விட்டுக்கொடுத்திடாது. ஜாஹிலிய்யாவின் படைபலத்தையும் இஸ்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொள்கின்றது. எங்கேயும் அதோடு சமரசம் செய்து கொள்வதில்லை. எல்லா ஆதிக்கச் சக்திகளுக்கு முன்னேயும் அனைத்து மக்களின் முன்னேயும் இஸ்லாம் தன்னை எந்த வளைவும் இல்லாமல் அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதனால் மக்கள் அதன் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ள முடிகின்றது. அதோடு இஸ்லாம் இறைவனால் தங்களுக்கு வழங்கப்பட்ட அருள்கொடை என்பதையும் உணர்ந்தார்கள் தெளிந்தார்கள் மக்கள். இஸ்லாம் இறைவனால் அருளப்பட்ட அருள்நெறி. அந்த இறைவன் தான் மனிதனைப் படைத்தான். அந்த மனிதன் எத்தகைய செய்தியை எப்படி ஏற்றுக் கொள்வான் என்பதை அந்த இறைவன் நன்றாக அறிவான். ஆகவே அவன் வழங்கிய வழிகாட்டுதலை நாம் சமரசம் செய்து ஜாஹிலிய்யாவிடம் சரணடைவது போல் கெஞ்சிப் பிரச்சாரம் செய்திட வேண்டாம். ஜாஹிலிய்யா என்ற அஞ்ஞானத்தோடு நெளிந்து கொண்டிருக்கும் இஸ்லாமியப் பிரச்சாரகர்கள் சிலர் மக்களிடம் எப்படியொரு தலைகீழ் மாற்றத்தைப் பற்றிப் பேசிடுவது எனக் கலங்குகின்றார்கள். அப்படியே நாம் பேசினால் அது மக்களிடம் எடுபடுமா? என்றொரு மயக்கம் இவர்களுக்கு. இப்படியொரு மயக்கம் இவர்களுக்குத் தேவையில்லை. மனிதன் உண்மை எது பொய் எது என்பதை உணர்ந்திடும் ஆற்றல் பெற்றவன். அவன் உண்மையை உண்மை என உணர்ந்தவுடன் ஏற்றுக்கொள்ளும் இயல்பும் நெஞ்சுரமும் படைத்தவன். அவன் தலைகீழ் மாற்றத்திற்குத் தயாரானவன். தன்னிடம் சமர்ப்பிக்கப்படும் கொள்கை தூய்மையானது முழுமையானது நாம் ஏற்கனவே ஏற்று வாழ்ந்த கொள்கையைவிட உயாந்தது என்பதை உணர்ந்தால் உடனே ஏற்றுத் தன் வாழ்வை மாற்றிக்கொள்வான். இதை விட்டுவிட்டு நீங்கள் இன்றைக்கு மக்கள் மத்தியில் குடியிருக்கும் ஜாஹிலிய்யா என்ற மௌட்டிகங்களில் சிலபல மாற்றங்களைக் கொண்டு வந்தாலே இந்த மௌட்டிகங்கள் இஸ்லாமாக மாறிவிடும் என்று பேசினால் என்னவாகும்? மக்கள் இஸ்லாம் என்பது முக்கால் பங்கு மௌட்டிகந்தான் என எண்ணலாம். அல்லது நாம் ஏற்கனவே ஒரு நல்ல கொள்கையில்தான் இருக்கின்றோம். சில சில்லரை மாற்றங்களுக்காக அல்லல்களை ஏற்பானேன்? ஏன எண்ணுவார்கள். அதே போல் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்யப்பட வேண்டிய மாற்றங்களுக்காக நாம் ஏன் ஏற்கனவே நிலைநாட்டப் பெற்ற ஒரு வாழ்க்கை நெறியை விட்டுவிட வேண்டும்? என்றெல்லாம் அவர்கள் நினைக்கலாம். நாம் இஸ்லாத்தை விட்டுக் கொடுத்தும் வளைத்துப் பேசியும் அதனை மக்களுக்கு ஏற்றாற்போல் போதிக்கின்றோம் எனப் பீற்றிக் கொள்வதில் இத்துணைக் கோட்பாடுகள் மறைந்து கிடக்கின்றன என்பதை உணர வேண்டும். இஸ்லாத்தை அது எப்படி இருக்கின்றதோ அப்படியே பிரச்சாரம் செய்வோம். நாம் மௌட்டிகங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி இஸ்லாத்தை நியாயப்படுத்த வேண்டாம். இன்று மேலை நாடுகளிலிருக்கும் வாழ்க்கை நெறிகளையும் வாழ்க்கை முறைகளையும் நாம் நிச்சயமாக ஏற்பதற்கில்லை. அவற்றை நாம் ஒட்டுமொத்தமாக மறுக்கின்றோம். எதிர்க்கின்றோம். இதில் நாம் தெளிவாகவே இருப்போம். இந்த மேலைநாடுகளும் கீழை நாடுகளும் மனிதர்களை எந்தத் திசைநோக்கி இழுத்துச் செல்கின்றனவோ அதற்கு நேர் எதிரான திசையில் தான் மனிதனின் இவ்வுலக வாழ்வின் வெற்றியும் மறுமை வாழ்வின் வெற்றியும் இருக்கின்றது. ஆதலால் நாம் இந்த மேலை நாடுகள் மனிதர்களை எந்தத் திசையில் இழுத்துக் கொண்டிருக்கின்றனவோ அதற்கு நேர் எதிரான திசைநோக்கித் திருப்பிடவிருக்கின்றோம் என்பதை மறக்க வேண்டாம். இந்த மேலைநாடுகள் மனிதர்களை இழுத்துச் செல்லும் திசையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து தொடர்ந்து நாமும் மேலைநாடுகள் மனிதர்களை இழுத்துச் செல்லும் திசையிலேயே இழுத்துச் செல்வோம் என்பதற்கில்லை. நாம் போடுவது நேர் எதிரான எதிர்நீச்சல் என்பதை நாம் உணர்வோம். காரணம் நாம் சொல்வது இஸ்லாம் இன்றைய சமுதாயங்களின் போக்கு அதற்கு நேர் எதிரான ஜாஹிலி;ய்யா என்ற மௌட்டிகம். அதேபோல் இஸ்லாம் மேலெழுந்த வாரியான மாற்றங்களை எதிhப்பார்க்கவில்லை. அது தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்க்கின்றது. இஸ்லாத்தை நாம் அதன் உண்மையான வடிவில் எடுத்துச் சொல்லிடும் போது பலர் முகஞ்சுழிக்கலாம் அவர்கள் ஏற்கட்டும் அல்லது மறுக்கட்டும் அது அவர்களின் சுதந்திரம் ஏற்றால் ஈடேற்றம் அவர்களுக்கு மறுத்தால் அல்லாஹ்விடமிருக்கின்றது அவர்களின் கணக்கு. நிச்சயமாக அல்லாஹ் படைக்கப்பட்டவைகளிலிருந்து தனித்தவன் தனியானவன். இங்கே வினா ஒன்றே ஒன்றுதான். அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கின்றானா? (ஈமான் கொள்கின்றானா?) இல்லை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றானா? (ஈமான் கொள்ள மறுக்கின்றானா?) அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை ஏற்றுக் கொள்ளாதவன் ஜாஹிலிய்யா என்ற மௌட்டிகத்தில் வாழ்பவனே. இதனை தெளிவுபடுதத்pயாக வேண்டும். அல்லாஹ்வை ஏற்றுக்கொள்பவன் அல்லாஹ்வின் வழிகாட்டுதலின் வழியே வாழ்ந்திட வேண்டும். அவன் மட்டுமே முஸ்லிம். ஜாஹிலிய்ய முறைகளின்படி அஞ்ஞான முறைகளின் படி வாழ்ந்து கொண்டு தன்னை முஸ்லிம் எனச் சொல்பவனை மீண்டும் புனரமைத்து முஸ்லிமாக மாற்றிட வேண்டும். இதுவும் இன்று இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டு வாழ்பவர்களின் தவிர்க்கவியலாத பணி. இன்று நாம் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கின்றோம் என்றால் நாம் இந்த மக்களிடம் எந்தச் சன்மானத்தையும் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் முஸ்லிம்களைப் புனரமைக்க விரும்புகின்றோம் என்றால் அவர்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கின்றோம் என்பதனால் அல்ல. நாம் இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்பதும் முஸ்லிம்களைப் புனரமைக்க விரும்புவதும் அவர்களை நாம் உளமாற நேசிக்கின்றோம் என்பதனால் தான். இது தான் இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்களின் பார்வை. இஸ்லாத்தை இலட்சியமாகக் கொண்டவர்கள் இஸ்லாத்தின் அளப்பரிய கருணை மக்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்திட வேண்டும் என ஆசைப்படுகின்றார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மகத்தான கூலிகளை மறுமையில் கொடுப்பான். இப்படி இந்த உலகில் எதையுமே எதிர்பார்க்காமல் பணி செய்கின்ற நாம் ஏன் மௌட்டிகங்களின் அளவுக்கு இஸ்லாத்தைத் தாழ்த்திட வேண்டும்? நாம் ஏன் தோல்வி மனப்பான்மையோடும் மன்னிப்புக் கேட்கும் தோரணையிலும் அல்லாஹ்வின் நிறைவான மார்க்கத்தை மக்களிடம் சமர்ப்பித்திட வேண்டும். நம்முடைய முதல்பணி ஜாஹிலிய்யா என்ற மௌட்டிகத்தை இஸ்லாமிய நெறிமுறைகளைக் கொண்டு மாற்றியமைத்திட வேண்டும் என்பதே. இதை நாம் அஞ்ஞான கொள்கைகளின் (ஜாஹிலிய்யாவின்) வாழ்க்கை முறைகளிடம் மண்டியிட்டுச் செய்திடவியலாது. இதைச் செய்வதற்கு ஜாஹிலிய்யாவின் பாதையில் போவோம் பின்னர் எல்லாம் சரியாகிவிடும் என்று யாரும் கருத வேண்டாம். முதல் பயணமே ஜாஹிலிய்யாவன் பாதையில் தான் என்றால் முடிவு தவறாமல் அதன் முடிவாகத்தான் இருந்திடும். வேண்டாம். நாம் இஸ்லாத்தின் பாதையிலேயே நமது பயணத்தைத் துவங்குவோம். இதில் எதிர்ப்படும் தடைகளும் தடங்கல்களும் என்னவாக இருந்தாலும் எதிர்கொள்வோம். பின்னர் அவற்றை வெற்றி கொள்வோம். இந்த வெற்றி நாம் ஜாஹிலிய்யாவின் மேல் கொள்ளும் நிரந்தர வெற்றியாகும். அது இஸ்லாத்தின் வெற்றி. அல்லாமல் எந்த வகையிலும் நாம் மௌட்டிகங்களோடு மண்டியிட மாட்டோம். அதனோடு சமரசம் செய்து சாய்ந்து வாழ்ந்திட மாட்டோம்.
இங்கே நாம் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். நாம் (ஜாஹிலிய்யா) அஞ்ஞான சமுதாயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்னும் இந்த அஞ்ஞான சமுதாயங்களைத்தான் அனுதாபத்தோடும் அன்போடும் இஸ்லாத்தின் பக்கம் அழைக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதில் நாம் கண்ணுங்கருத்துமாய் வாழ்ந்திட வேண்டும். இந்த மௌட்டிகங்களோடு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோம் அதில் கண்ணியமாக நடந்து கொள்வோம். அதற்காக ஒரேயடியாக ஜாஹிலிய்யாவில் மூழ்கிட மாட்டோம். இஸ்லாத்தை அதன் உண்மை வடிவில் எடுத்துச் சொல்லிடுவோம். அதில் அன்பையும் அனுதாபத்தையும் காட்டிடுவோம். ஈமான் கொண்டவர்களாக அதாவது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பதால் நம்முள் ஓர் அறிவுத்தெளிவையும் உயர்வையும் கண்ணியத்தையும் உணர்வோம். அதற்காக நாங்களே உயர்ந்தவர்கள் எனக் கர்வங்கொண்டலைந்திட மாட்டோம். எளிமையையும் பவ்வியத்தையும் கைக்கொண்டவர்களாக இஸ்லாத்தை எடுத்துச்சொல்வோம். அல்லாமல் ஜாஹிலிய்யாவுக்கும் இஸ்லாத்திற்கும் பாலம் போட்டுத் தரமாட்டோம். அப்படியொரு பாலம் போடுவோமேயானால் அது ஜாஹிலிய்யாவின் பிடியிலிருப்பவர்ள் இஸ்லாத்திற்கு வந்திட போடப்படும் பாலமாகவே இருந்திடும். இப்படி இந்தப் பாலத்தைக் கடந்து இஸ்லாத்திற்கு உள்ளே வருபவர்கள். இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற சொல்பவர்களாகவும் இருக்கலாம். அல்லது இனிமேல் இஸ்லாத்தைத் தெரிந்து இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வருபவர்களாகவும் இருக்கலாம். இப்படி வெளிச்சத்திற்கு வருபவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் அனுபவிக்கும் அத்தனை பலன்களையும் அனுபவிக்கலாம். தாங்கள் எவ்வளவு பெரிய பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தோம் என்பதையும் உணரலாம். இந்த நன்;மைகளை அனுபவிக்கவும் தாங்கள் வீழ்ந்து கிடந்து அதல பாதாளத்திலிருந்து விடுபடவும் அல்லாஹ்வின் அடியார்களாக ஆகிடவும் அத்தனை வாய்ப்புகளுமிருந்தும் வசதிகளுமிருந்தும் அதனைப் பயன்படுத்திடாதவர்களிடம் நாம் அல்லாஹ் அவன் திருத்தூதர்(ஸல்) அவர்களின் வழியாக இந்நிராகரிப்போரிடம் சொன்னதைச் செல்வோம்.
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம் (அல்குர்ஆன் 109 : 6)
No comments:
Post a Comment