Monday, November 17, 2008

உலகின் பொருளாதார நெருக்கடியும் இஸ்லாமிய பொருளாதாரமும் - பகுதி 01

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ
மனிதர்களுக்காக கொண்டுவரப்பட்ட சமுதாயத்தில் நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் நன்மையானவற்றை ( சரியானவற்றை) ஏவுகிறீர்கள், தீமையானவற்றைத் (தவறானவற்றை) தடுக்கிறீர்கள், மேலும் (ஒரே இறைவனான) அல்லாஹ்மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்,
( 3: 110)

மனித இனத்திற்காக கொண்டுவரப்பட்ட மிகச்சிறந்த சமுதாயம் என்று அல்லாஹ்(சுபு) நம்மை சிலாகித்துக் கூறியுள்ளான், ஏனெனில் நாம் நன்மையானவற்றை ஏவுகின்றோம், தீமையானவற்றைத் தடுக்கின்றோம், இன்றைக்கு உலகம் முழுவதிலும் காணப்படும் தீமைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக குரல் எழுப்பவேண்டியது நமது பொறுப்பு என்பதையும் அதுநமது கடமை என்பதையும் நாம் உணரவேண்டும், இன்றைக்கு உலகத்தில் ஆதிக்கம் பெற்றிருக்கும் முதலாளித்துவ கொள்கையின் காரணமாக பொருளாதாரத்துறையில் அநீதியும் அத்துமீறல்களும் பரவலாக காணப்படுவது மிகப்பெரிய தீமையாக இருக்கிறது,

இன்றைய உலகில் ஏற்பட்டிருக்கும் நிதிச்சந்தை நெருக்கடி(financial crisis) மேற்குலகின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைத் தகர்த்துவிட்டதோடு தாராளவர்த்தக சந்தை (free market policy) என்ற பொருளாதாரக் கொள்கையின் கோரமுகத்தை வெளிக்கொணர்ந்து விட்டது, எனினும் இந்தபிரச்சினைக்கு மாற்றுவழியைத் தேடும் மேற்குலகம் (western countries) பொதுவுடமைக்கோட்பாட்டின் செல்லறித்துப்போய் எஞ்சியுள்ள கொள்கையை மறுஆய்வு செய்வதையும் பொருளாதாரத்தில் அரசு தலையீடு செய்து நிலையை சீர்படுத்துவதையும் மட்டுமே சரியான நடவடிக்கையாக கருதுகிறது, மேற்கூறிய காரணங்களை மையமாக வைத்துதான் ஒழுங்குமுறை மற்றும் வெளிப்படையான அனுகுமுறை ஆகியவற்றை மேம்படுத்தி தாராளவர்த்தகக் கொள்கையை மேலும் தொடரவைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, அதாவது சிலசீர்திருத்தங்களை மேற்கொண்டு முதலாளித்துவ கொள்கையை இன்னும் வேகமாக செயல்படுத்தவேண்டும் என்று மேற்குலகம் கருதுகிறது, ஒருமுறை முதலாளித்துவக்கொள்கை பற்றியும் அதன் தீயஅம்சங்கள் பற்றியும் விரிவாக விவாதம் செய்யும்போது பொருளாதாரத் துறையில் பேராசிரியராக இருக்கும் அதன் ஆதரளவாளர் ஒருவர். இருக்கின்ற மோசமான கொள்கைகளில் முதலாளித்துவம் சிறந்தது என்று கூறினார், பின்னர் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை மட்டும்தான் சிறந்த ஒரேமாற்றுவழியாக இருக்கிறது என்று அவரிடம் எடுத்துக் காட்டியபோது இஸ்லாத்தில் இத்தகைய முற்போக்கான கொள்கைகள் இருக்கிறதா? என்று ஆச்சர்யம் அடைந்ததோடு அவர் அஒ குறித்து ஒருபோதும் தாம் படித்ததில்லை என்று கூறினார்!

இன்றைக்கு உலகம் கண்டுள்ள மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் வெளிச்சத்தில் முதலாளித்துவக் கொள்கையின் பிற்போக்குத்தனத்தையும் அதன் ஆபத்தான விளைவுகளையும் விளக்கிக்கூறி இஸ்லாத்தின் பொருளாதாரக் கொள்கையை ஒருமாற்றுவழியாக சிந்திக்கவேண்டும் என்றும் அதன் முற்போக்கான வழிகாட்டுதலை பரிசீலிக்கவேண்டும் என்றும் எடுத்துக்கூறுவதற்கு முஸ்லிம்களுக்கு அறியதொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கார்ல்மார்கஸ்(karlmarks) பிரிட்டனில் இருந்தவாறு கம்யூனிஸ கோட்பாடுகளை வரைந்தபோது அதன்மீது கணிசமான மக்களுக்கு கருத்துவேறுபாடு இருந்தபோதிலும் அதை ஒரு மாற்றுவழியாக ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்கவில்லை, எனவேதான் லெனின் (Lenin) இந்தகொள்கையை கையில்எடுத்து அதன் அடிப்படையில் ஒருஅரசியல் கட்சியை உருவாக்கி பின்னர் ஒருஅரசை ஏற்படுத்தி அதை நடைமுறைப்படுத்தினார், இந்தக்கொள்கை சரியானதுதான் நடைமுறைப்படுத்த சாத்தியம் உள்ளதுதான் என்பதற்கு ஆதாரமோ அல்லது எந்தவகையான நிரூபனமோ இல்லாத நிலையில்கூட உலகஅரங்கில் கம்யூனிஸக்கொள்கை அரங்கேற்றப்பட்டது, அல்லாஹ்(சுபு) வின் இருப்பை (existence of Allah) மறுக்கின்ற கார்ல்மார்க்ஸின் கம்யூனிஸக் கொள்கை தோல்வியுற்றுவிட்டது என்பது திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதையும் ஆனால் அல்லாஹ்(சுபு) அருளிய இஸ்லாம் என்ற சத்தியகொள்கையை நாம் கையில் வைத்திருக்கிறோம் என்பதையும் அது பதிமூன்று நூற்றாண்டுகள் இந்தஉலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு உலகை முன்னேற்றப்பாதையில் இட்டுச்சென்றது என்பதையும் நாம் எண்ணிப்பர்க்கவேண்டும்,

ஆகவே இஸ்லாத்தை ஒருமாற்று வழியாக உலகஅரங்கில் சமர்ப்பிப்பது மிகஇன்றியமையாத விவகாரமாகும், இஸ்லாமிய நிதியியல். இஸ்லாமிய வங்கியியல் என்று விளக்கிக்காட்டுவதைவிட இஸ்லாமிய பொருளாதாரம் என்ற கோணத்தில் நாம் விளக்கவேண்டும், வட்டியைத் தடைசெய்யும் ஷரியாவிதிகளை மீறாமல் இன்றைய வாழ்க்கைமுறையில் ஒருதனிமனிதரோ அல்லது ஒருகுடும்பமோ லாபம் ஈட்டுவதற்கு வங்கிநடவடிக்கையில் ஈடுபடுவதுதான் இஸ்லாமிய வங்கியியல் என்றும் இஸ்லாமிய நிதியியல் என்றும் கூறப்படுகிறது, எனினும் இஸ்லாமிய பொருளாதாரத்தை இப்போது விளக்கிக்கூறுவதன்மூலம் முதலாளித்துவக் கொள்கைக்கு உண்மையான மாற்றுவழி இதுதான் என்பதை தெளிவுபடுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம்,

இன்றைக்கு உலகில் இஸ்லாமியஅரசு என்று ஒன்று இல்லாத காலகட்டத்தில் குர்ஆன் சுன்னா ஆகியவற்றிலிருந்து கொண்டுவரப்பட்டு ஆயிரம்ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையை நாம் பெற்றுள்ளோம், இதனை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரிக்கொள்கை உடையவர்களையும் வலதுசாரிக்கொள்கை உடையவர்களையும் சிந்திக்கவைப்பதற்கு தெளிவான விவாதங்கள் மேற்கொள்ளப்படவேண்டும், மற்றவை போல இஸ்லாம் என்பது வெறும் மதமல்ல அது இன்று மனிதஇனம் எதிர்கொண்டுள்ள சவால்கள் அனைத்திற்கும் தீர்வு வழங்குவதற்கு ஆற்றல் பெற்ற ஒருமுழுமையான சித்தாந்தம் (existence of Allah) என்பதை நாம் விளக்கிக்காட்டவேண்டும்,

இஸ்லாமிய பொருளாதார அமைப்பு :
(Islamic economical system)

இஸ்லாத்தின் பொருளாதார அமைப்பை சிறிய உரையில் முழுமையாக கொடுத்துவிட முடியாது என்ற காரணத்தால் அதன் முக்கியமான அம்சங்களையும் குறிப்பாக இன்று நாம் எதிர்கொண்டுள்ள நிதிநிலை நெருக்கடியை எவ்வாறு சீர்படுத்துவது என்பதையும் விவாதிப்போம், பொருளாதார கல்வியை கற்கும் ஒருமாணவர் அதைப்பற்றிய முதல்பாடத்தைக் கற்பதுபோல நாம் பொருளாதார பிரச்சினை என்றால் என்ன என்று பார்ப்போம், ஏனெனில் அதுதான் நாட்டின் அடிப்படைவிவகாரமாக இருக்கிறது, வளங்கள் வரையறைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்றும் தேவைகள் வரையறைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது என்றும் முதலாளித்துவவாதிகள் (capitalist) கூறுகின்றனர், ஆகவே பொருளாதாரத்தில் உற்பத்திதான் முக்கியஅம்சம் என்று கருதப்படுகிறது, எனவே மக்களின் நுகர்வுக்காக அதிகமதிகம் பொருட்கள் உற்பத்தி செய்யப்படவேண்டும் என்று அவர்கள் எண்ணுகின்றனர், இதை அவர்கள் பொருளாதார பிரச்சினையை உருக்கி ஒழுகவைத்தல் (trickle down economics) என்று கூறுகின்றனர், உற்பத்தியை உயர்ந்தபட்ச அளவு உயர்த்திவிட்டால் பொருளாதாரப் பிரச்சினை தானாக தீர்ந்துவிடும் என்பது அவர்கள் யூகநம்பிக்கையாகும், இதற்கு அவர்கள் கூறும்உதாரணம்: ஒருகேக் மிகப்பெரிய அளவில் இருந்தாலும் பசியில் இருப்பவர்கள் அதை துண்டுதுண்டுகளாக்கி உட்கொண்டுவிடுவார்கள்,

இதனடிப்படையில் அவர்கள் (மொத்த உள்நாட்டு உற்பத்தி - gross domestic production -GDP ) அல்லது (மொத்த தேசிய உற்பத்தி - gross national production - GNP) மீது பலமான நம்பிக்கை வைத்திருக்கறார்கள், இதனடிப்படையில்தான் இந்தியாவில் உற்பத்தி பெருகியபோது அதன்பலன் பாமரமனிதர் எவருக்கும் கிடைக்காதபோதும் அதன் லாபகணக்கு கார்ப்பரேட் வங்கிகளின் கணக்கேட்டில் மட்டும் இருந்தபோதும் பிஜேபி அரசு இந்தியா ஒளிர்கிறது என்று கோஷம்எழுப்பியது!




சொத்துக்களை உற்பத்திசெய்வதில் மட்டுமல்ல சொத்துக்களை விநியோகம் செய்வதிலும் இஸ்லாம் கவனம் செலுத்துகிறது :

முதலாளித்துவக்கோட்பாடு மற்றும் கம்யூனிஸகோட்பாடு ஆகியவை பொருளாதார விவகாரத்தில் கொண்டுள்ள கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தை இஸ்லாம் கொண்டிருக்கிறது, அது உற்பத்தியை மட்டுமல்ல வளங்களை வினியோகம் செய்வதிலும் கவனம் செலுத்துகிறது, பொருட்கள் பெருமளவில் உற்பத்திசெய்யப்பட்டாலும் வாங்கும்திறன் பெற்ற செல்வந்தர்கள் மட்டுமே அவற்றை வாங்கமுடியும், ஆகவே பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பதால் மட்டும் பொருளாதாரப் பிரச்சினை தீர்ந்துவிடாது, மாறாக ஒவ்வொரு தனிமனிதரின் அடிப்படைதேவைகள் முழுமையாக நிறைவுசெய்யப்படுவது மூலமாகத்தான் பிரச்சினைக்கு தீர்வுஏற்படும், அனைத்து மனிதர்களின் அடிப்படைத்தேவைகள் முழுமையாக நிறைவுசெய்யப்படும் அளவுக்கு பூமியில் வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன, சமுதாயத்தில் மனிதர்களை இஸ்லாம் ஒட்டுமொத்தமான பார்வையில் மட்டும் பார்க்கவில்லை மாறாக அவர்கள் ஒவ்வொருவர் மீதும் தனித்தனியாக கவனம்செலுத்துகிறது, ஒவ்வொருவரையும் தனது அடிப்படைதேவைகளை முழுமையாக நிறைவுசெய்து கொள்ளவேண்டிய அவசியத்தில் இருக்கும் மனிதஉயிராகவே இஸ்லாம் கருதுகிறது, அதன்பின்னர் அவருடைய செழிப்பான ஆடம்பர வாழ்கையை அவருடைய தகுதிக்கேற்ப அடைந்துகொள்ள அவருக்கு வழிகாட்டுவதற்காக இயன்றவரை அவர்மீது தனிக்கவனம் செலுத்துகிறது,

அடிப்படைத்தேவை அனைத்திற்கும் இஸ்லாம் உத்திரவாதம் அளிக்கிறது :

இஸ்லாமியஅரசின் கீழ்வாழும் அனைத்துகுடிமக்களுக்கும் உணவு உடை இருப்பிடம் போன்ற அனைத்து அடிப்படைதேவைகளையும் முழுமையாக பெற்றுக்கொள்ளும் உரிமையை அஹ்காம் ஷரியா வழங்கியிருக்கிறது, அல்லாஹ்வின்தூதர்(ஸல்)கூறினார்கள்.

ஆதமின் மகனுக்கு தனது பசிக்கு உணவையும் குடிப்பையும் பெற்றுக்கொள்வதற்கும் தனது நிர்வானத்தை மறைத்துக்கொள்வதற்கு ஆடையைப் பெற்றுக்கொள்வதற்கும் பாதுகாப்புடன் வாழ்வதற்கு ஒருகுடிலைப் பெற்றுக்கொள்வதற்கும் உரிமையுண்டு, (நூல்:திர்மிதி)

தங்கள்தேவையை நிறைவுசெய்துகொள்ள முடியாதவர்களுக்கும் தங்களை பாதுகாக்கவேண்டிய குடும்பத்தினரிடமிருந்து தங்களது தேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கும் உரிய அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்வது இஸ்லாமியஅரசின் கட்டாயகடமையாகும்,

கலீ*பாக்களில் பிரபலமானவரான உமர் இப்னு அப்துல்அஸீஸ்(ரஹ்) ஆட்சிக்காலத்தில் இராக் மற்றும் பஸ்ரா ஆகிய மாகாணங்களின் கவர்னர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது.

நம்மோடு உடன்படிக்கை அடிப்படையில் வாழும் மக்களிலுள்ள முதியவர்களைப் பற்றி விசாரித்து அவர்களைப் பற்றிய விபரங்களை உடனே சேகரிப்பீராக. அவர்கள் சொந்தமாக பொருள்ஈட்டுவதற்கு ஆற்றல் பெறாதவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் தேவையை நிறைவுசெய்து கொள்வதற்கு கருவூலகத்திலிருந்து முறையான உதவித்தொகைகளை வழங்கிடுவீராக, (நூல்: அல்அம்வால் ஆசிரியர் அபூஉபைது பக்கம் 805 )

இஸ்லாமியஅரசின் காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பொதுக்குளங்கள் இருந்துவந்தன, மேலும் பயணிகள் தங்குவதற்கு முஸô*பிர்கானா என்றழைக்கப்படும் தங்கும்விடுதிகளும் அவர்கள் இலவசமாக உணவு அருந்துவதற்கு பொதுசமயல் கூடங்களும் இருந்துவந்தன, உதாரணமாக. போஸ்னியாவில் உஸ்மானியகிலா*பா ஆட்சிக்காலத்தில் ஏழைமக்கள் இலவசமாக உணவு அருந்துவதற்கு பொதுசமயல்கூடங்கள் இருந்துவந்தன,

கி,பி, 872 ல் கெய்ரோவில் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக முறையான வசதிகளுடன்கூடிய மருத்துவமனை அமைக்கப்பட்டது, அஹமது இப்னு துலூன் மருத்தவமனையில் அனைத்து நோயாளிகளுக்கும் இலவசசிகிச்சையும் இலவசமருந்துகளும் வழங்கப்பட்டன, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான கழிவறைகளும் குளியலறைகளும் அமைக்கப்பட்டிருந்தன, மேலும் அதில் சிறந்த ஒருநூலகமும். மனநிலை சரியில்லாத நோயாளிகளுக்கு தனிப்பிரிவும் அமைக்கப்பட்டிருந்தன, மருத்துவமனைக்குள் தங்கி சிகிச்சை பெறவேண்டிய நோயாளிகளுக்கு படுக்கைவசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் சீருடையுடன் தங்கும்போது தங்கள் சொந்தஆடைகளை பாதுகாத்து வைப்பதற்கு மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன, ஒவ்வொரு நோயாளிகளும் தங்களுக்குரிய சிகிச்சைப் பதிவேடுகளை தனிப்பட்டமுறையில் வைத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்,

சொத்துக்களையும் வளங்களையும் விநியோகம் செய்வது அரசின் கடமையாகும் :

ஒருசிலமனிதர்களிடம் மட்டும் செல்வம் சுற்றிக்கொண்டிருப்பதை அல்லாஹ்(சுபு) தடைசெய்திருக்கிறான், அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ
உங்களிலுள்ள செல்வந்தர்களிடையே மட்டும் செல்வம் சுற்றிக்கொண்டிருக்கக்கூடாது, (59:7)

அனைத்துதரப்பு மக்களிடமும் செல்வம் சுற்றிவரவேண்டியது கட்டாயம் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது, மேலும் சிலமக்களை ஒதுக்கிவிட்டு குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் செல்வம் சுற்றிக்கொண்டிருப்பதற்கு இஸ்லாம் தடைவிதித்திருக்கிறது, பொருட்களை பதுக்குவதோ அல்லது ஏகபோக வர்த்தகஉரிமை பெறுவதோ இஸ்லாத்தில் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது, பொருட்களின் தயாரிப்பாளர்களோ அல்லது விற்பனைசெய்பவர்களோ விலையை உயர்த்தும் நோக்கத்தோடு பொருட்களை பதுக்கிவைப்பதற்கு அனுமதிகிடையாது, கீழ்கண்ட ஹதீஸ் அடிப்படையில் இது விதியாக ஆக்கப்பட்டிருக்கிறது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக முஸ்லிமில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது

உணவுப்பொருட்களில் ஏகபோகவர்த்தக உரிமை கொண்டாடுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது, எவரேனும் ஏகபோகவர்த்தக உரிமை கொண்டாடுவாரேயானால் அவர் பாவம் செய்தவர் ஆவார்,

வட்டி தடைசெய்யப்பட்டிருக்கிறது . வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது :

லாபநஷ்டத்தில் பங்கேற்பது அடிப்படையிலுள்ள வியாபார ஒப்பந்தங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வட்டி அடிப்படையிலுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் தடைசெய்யப் பட்டிருக்கின்றன,

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை தடைசெய்திருக்கிறான்,
(2:275)

வட்டி தடைசெய்யப்பட்டிருப்பதால் பணத்தை வங்கிகளில் சேமித்துவைத்து வட்டியைப் பெற்றுக்கொள்ளும் நிலை இருக்காது, தேவைக்குமேல் எஞ்சியுள்ள பணத்திற்கு முஸ்லிம்களிடமிருந்து 212% ஸகாத் வசூலிக்கப்படுகிறது, இதன்காரணமாக மக்கள் தங்கள் தேவைகளுக்கு தாராளமாக செலவு செய்துகொள்ளவும் தேவைக்குமேல் எஞ்சியுள்ள பணத்தை முதலீடுசெய்யவும் ஊக்கம் பெறுகிறார்கள், இது ஆரோக்கியமான பொருளாதாரசூழல் ஏற்படுவதற்கு இன்றியமையானதாக இருக்கிறது, ஏனெனில் செல்வம் ஒரேஇடத்தில் குவிந்துதிருப்பதால் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுவிடாமல் சமுதாயத்தின் அனைத்துதரப்பு மக்களிடமும் அது சுற்றிக்கொண்டிருக்கும், மக்கள் தாராளமாக செலவுசெய்யும் போதும் பணத்தை தொழிலில் முதலீடுசெய்யும்போதும் வேலைவாய்ப்புகள் உருவாகுவதற்கும் சூழல் தானாகவே ஏற்பட்டுவிடும்,

இந்தஇடத்தில் வட்டிஅடிப்படையில் கடன் பெற்றுக்கொள்ளும் தற்கால நிலையை சற்றுகவனமாக ஆய்வுசெய்து விளங்கிக்கொள்ள வேண்டும், ஏனெனில் மக்கள் வட்டியின் தீயவிளைவுகளை இன்னும் சரியாக அறிந்துகொள்ளவில்லை, இஸ்லாத்தைப் பொறுத்தவரை அல்லாஹ்(சுபு) வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தேவையுள்ளவர்களுக்கு கடன்கொடுப்பதை முஸ்லிம்கள் மேற்கொள்கிறார்கள்,
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.

தேவையுள்ளவர்களுக்கு கடன்கொடுப்பது தர்மம்செய்வதில் உள்ளதாகும்,

முதலாளித்துவ சமூகத்தில் கடன்கொடுப்பவர் லாபத்தை மட்டும் பெற்றுக்கொள்கிறார், எந்தநஷ்டத்திற்கும் அவர் பொறுப்பேற்றுக் கொள்வதில்லை, இதுஅநீதமான தீயசெயலாகும், இஸ்லாத்தின் அடிப்படையில் லாபத்தில் பங்குகொள்பவர் நஷ்டத்திலும் பங்குகொள்ளவேண்டும், இதுதான் இஸ்லாம் அங்கீகரித்த வியாபாரக்கூட்டு (partnership) அல்லது தொரில்நிறுவன மாதிரி (company model) ஆகும், இஸ்லாத்தில் முதாரபா(mudhaarabah-partnership) என்ற கம்பெனி அமைப்பின் அடிப்படையில் பணம் பெற்றிருப்பவர் தொழிலில் முதலீடுசெய்வார், பணமில்லாதவர் உழைப்புசெய்வார், அவ்விருவரும் லாபநஷ்டத்தில் பங்குபெற்றுக்கொள்வார்கள், இஸ்லாத்தில் பங்குச்சந்தைமுறை(equity) இருக்கிறது. அதில் முதலீடு செய்பவர் நிர்வாகம்செய்பவர் ஆகியஇருசாராரும் லாபநஷ்டத்தில் பங்குபெற்றுக்கொள்வார்கள், முதலாளித்துவ பொருளாதாரத்தின் வட்டி அடிப்படையிலுள்ள பங்குச்சந்தைமுறை இதற்குநேர்முரணானது,

இன்றையதினத்தில் வட்டிஅடிப்படையில் கடன்பெறுவது வாடிக்கையாகி விட்டதால் மக்களும். பலநாடுகளின் அரசுகளும் பொருளாதாரத்தில் முடங்கிப்போய்விட்ட நிலையை காண்கிறோம், அமீருல்மூ*மினின் அலீ(ரளி) அறியாமைக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது கூறினார்.

இரும்பின் பலுவையும். கற்களின் பலுவையும். கசையடியின் பலுவையும் நாம் தாங்கிவிடுவோம், ஆனால் கடன்பலுவை நம்மால் தாங்கமுடியாது,


தொடரும்...

No comments:

Post a Comment