Monday, September 22, 2008

கிலாஃபா ஒரே தீர்வு என்ற புத்தகத்திலிருந்து...பகுதி 4

கிலாஃபாவை நிலைநாட்டும் வழிமுறை அது நபிகளாரின் வழிமுறை

முஸ்லிம்களாகிய நாம் எடுக்கும் எந்த முயற்சியும் நபிகளாரின் வழிவந்ததாகவே அமையவேண்டும். தொழுகை, ஹஜ் போன்ற தீனின் செயல்களில் நாம் இறைவனின் ஆணைப்படி நபிகளாரைப் பின்பற்றி நடப்பதைப் போல, "கிலாஃபாவை நிலைநாட்டுதல்" என்ற உயரிய கொள்கையிலும் நாம் நமது சுய எண்ணப்படி செயல்படாமல், நபிகளார்(ஸல்) அவர்கள் வகுத்த பாதையையே பின்பற்ற வேண்டும். ஏனெனில், தொழுகை, ஹஜ் ஆகியவற்றைப்போன்றே கிலாஃபா ஆட்சியில் வாழ்வதும் அது இல்லாத பட்சத்தில் கிலாஃபாவை நிலைநாட்டுவதும் ஒரு முக்கியக் கடமையேயாகும்.

அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை (அந்-நஜ்ம் 53: 3-4)
எவர் (அல்லாஹ்வின்) து}தருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்(அந்நிஸா 4: 80)

முதல் இஸ்லாமிய அரசை மதினாவில் நிறுவிய நபிகளார்(ஸல்), அதற்கான முயற்சியை இறைவனின் ஆணைப்படியே நடைமுறைப்படுத்தினார். எனவே நாமும் நபிகளாரின் வழியையே பின்பற்றவேண்டும். அதுவே இறைவன் காட்டிய வழிமுறையாகும்.

(நபியே!) நீர் சொல்வீராக! 'இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும். நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்." (யூசுப் 12: 108)

முதற்கட்டம்- பண்படுத்துதல்

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 'அலக்" என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.( அல் அலக் 96: 1-5 )
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக (அத்துஹா93:11)

ஆகிய சூராக்கள் மூலம் முஹம்மத்(ஸல்) அவர்களின் நபித்துவம் தொடங்கியது.

தமக்கு வந்த கட்டளையை முதன் முதலில் தமது குடும்பத்தினருக்கு எடுத்துரைத்தார்கள். பின்பு ஆருயிர்த்தோழர் அபுபக்கர்(ரலி) அவர்களிடம் விவரித்தார்கள். அதன்பின்னர் அபுபக்கர்(ரலி) அவர்களின் உதவியுடன் மற்றைய நம்பிக்கைக்குரிய நெருங்கியவர்களிடம் தமது து}துத்துவம் பற்றியும், ஓரிறைக்கொள்கை பற்றியும் எடுத்துரைத்தார்கள். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நபியவர்களின் செய்தி மக்கா நகர் முழுவதும் பரவியது.

இந்த ஆரம்ப காலகட்டமாகிய மூன்று ஆண்டுகளில் இஸ்லாமானது தனிநபர்கட்கு மட்டுமே போதிக்கப்பட்டது. தொழுவுருவங்களை வணங்கும் கூட்டத்தாரையும்(முஸ்ரிகீன்), அவர்களது அறியாமையையும்(ஜஹிலியா) நேரடியாக எதிர்நோக்கவில்லை. மாறாக இந்தக் காலகட்டத்தில், எதுவந்தாலும் எதிர்நோக்கத் தயாராகின்ற ஒரு மனோநிலையையும், குர்ஆனை வாழ்நாளில் நடைமுறைப்படுத்துகின்ற, உயர்ந்த ஒழுக்க நெறியை பிரதிபலிக்கின்ற பண்புகளையும், தமக்கு நெருங்கிய, தகுதியுடைய சிலரிடையே கற்பித்து, அவர்களைக் கொண்டு ஒரு கூட்டத்தினரை உருவாக்கினார்கள். அத்தகைய பண்புகள் மூலம் அவர்கள், தாம் வாழும் சமூகத்தை நேரிடையாக எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர்.

ஆனால், நபிகளாரும் அவரது குழுமத்தினரும் எதிர்கொண்ட சமுதாயம் இஸ்லாம் அல்லாத நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும், சட்டதிட்டங்களையும் கொண்டிருந்தது. அதாவது அந்தச் சமுதாயம் மொத்தத்தில் ஒரு ஜஹில் சமுதாயமாக இருந்தது. இந்தப் பின்னணியில்தான் நபிகளார் (ஸல்) தமது குழுமத்தினரிடையே இஸ்லாமிய அறிவை ஊட்டி, அல்லாஹ்(சுபு)வின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றை வலுவூட்டினார்கள். அவர்களது ஜஹில் நடைமுறைகளைத் தகர்த்து, தவ்ஹீது (ஓரிறைக்) கொள்கையையும், நடைமுறைகளையும் செறிவூட்டினார்கள். தமது நம்பிக்கைக்குறிய அந்த முஸ்லிம்களை, நபிகளார், தாருல் அர்காம் எனுமிடத்தில் கூட்டி குர்ஆனின் வழிகாட்டுதலை அவர்கட்கு விளக்கினார்கள்.
இன்றைய சமுதாயமும் அன்றைப்போலவே ஒரு ஜஹில் சமுதாயமாகவே உள்ளது. தனி ஆளாக நாம் ஒவ்வொருவரும் முஸ்லிமாக இருந்தபோதும், ஒரு சமுதாயமாக, அதன் சட்டதிட்டங்களும், சமூக அந்தஸ்துகளும் இஸ்லாமாக இல்லை. எனவே நபிகளாரின்(ஸல்) பாதையைப் பின்பற்றி நாமும் ஒரு குழுவினை தயார்படுத்தி, அவர்களிடையே இஸ்லாமிய அறிவையும் எதையும் தாங்கும் மனோபலத்தையும் உருவாக்க வேண்டும்.

கிலாஃபாவை நிறுவி இஸ்லாமிய வாழ்க்கை முறையை பின்பற்ற, முஸ்லிம்களை அழைக்கின்ற இந்தப் போராட்டத்தின் முதல் கட்டமாக இஸ்லாமிய மார்க்கத்தினைப் பற்றிய ஆழ்ந்த அறிவை பயிற்றுவித்து, பொறுமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட நபர்களை உருவாக்குதல் அவசியம். இஸ்லாத்தின் மீது அவர்கள் கொண்ட பற்றும் அவர்களது செயல்பாடும், மக்களிடையே இஸ்லாத்தின் மீதுள்ள நம்பிக்கையை வலுச்செய்யுமாறு இருக்க வேண்டும். மார்க்கத்தின் மீது தெளிவான அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு தஆவாவை மக்களிடையே சுமந்து செல்லும் ஒரு குழுவாக அதனை உருவாக்குதல் மிக அவசியமாகும்.

ஒரு கூட்டமாக செயல்படுவதன் அவசியம்.

தனியொருவரால் கிலாஃபாவை நிலைநாட்டுவதென்பது இயலாத காரியம் மட்டுமன்றி நபிவழியுமல்ல. அது முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயல்படுத்தவேண்டிய ஒரு கடமையாகும். நபிகளார், தம்மை பின்பற்றி வருவோர் யாரையும் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கவில்லை. முஸ்லிம்கள், தாருல்-அர்காம் எனுமிடத்தில் ஒன்றுகூடி இஸ்லாமை கற்றனர். அங்கு அவர்கள் ஒன்றாக தொழுது ஒரு குழுவாகவே செயல்பட்டனர். அது ஒரு தனித்தன்மை வாய்ந்த கூட்டமாகும்.

சஹாபாக்கள் ஒரு குழுமமாக செயல்பட்டதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. ஒருசமயம் சஹாபாக்கள் ஒன்றுகூடி விவாதித்துக் கொண்டிருந்தபொழுது, "நபிகளாரைத் தவிர வேறு யாரும் குர்ஆன் ஓதக் குறைஷியர்கள் கேட்டதில்லை" எனக் குறிப்பிட்டனர். அப்போது அப்து அல்லாஹ் பின் மசூது எனும் சஹாபி தாம் மறுநாள் குறைஷியர் முன் குர்ஆனை ஓதப்போவதாகக் கூறினார். மறுநாள் அவர் கஃபாவின் முன் சென்று, குறைஷியர்கட்கு கேட்கும்படி, சத்தமாக குர்ஆனை ஓதத் தொடங்கினார். அதைக் கேட்ட குறைஷியர் அந்த சஹாபியை தாக்கத் துவங்கினர். தமக்கு நேர்ந்ததை மற்ற சஹாபிகளிடம் அவர் கூறினார். அதற்கு அவர்கள் "இப்படித்தான் நடக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம்" என்றனர். அதைக்கேட்ட அந்த சஹாபி, தாம் மறுநாளும் அதேபோல ஓதப்போவதாக கூறியதைக்கேட்ட மற்ற சஹாபாக்கள் 'வேண்டாம். நீங்கள் இதுவரை செய்ததே போதும் அவர்கள் கேட்க விரும்பாததை நீங்கள் கேட்கச்செய்துவிட்டீர்கள்." எனக் கூறினர்.

மற்றொரு சமயத்தில், இஸ்லாத்தில் ஏசுநாதரின் இடம் பற்றிய குறைஷியரின் புகாருக்கு விளக்கம் கேட்டு, அபிசினியாவிலிருந்து முஸ்லிம்கட்கு அழைப்பு வந்தது. அதற்கு முஸ்லிம்கள் தமது குழுவை கூட்டி விவாதித்தனர். பின்னர் குர்ஆனிலுள்ளதை அப்படியே கூற முடிவெடுத்து, தமது சார்பாக ஜாஃபர் பின் அபுதாலிப் எனும் சஹாபியை அனுப்பிவைத்தனர். அந்த சஹாபியின் விளக்கம் கேட்ட அபிசினியாவின் நேகஸ் '' சாந்தமுடன் இருங்கள். உங்கட்கு இடையூறிழைப்பவர் தண்டனைக்குள்ளாவர். நீங்கள் விரும்பியபடி எங்கும் செல்லுங்கள். எனது நாட்டில் உங்கட்கு எப்பொழுதும் பாதுகாப்பு உண்டு."" என்றார்.

No comments:

Post a Comment