Wednesday, December 30, 2009

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 01 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

மக்களின் சிந்திக்கும் தரம் வீழ்ச்சியுறுகின்றபோது, மக்களுக்கு மத்தியில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ்வதன் காரணமாக, தேசப்பற்று என்ற பிணைப்பு (Raabitah Al Wataniyyah) உருவாகின்றது. மனிதர்களிடம் காணப்படும் உயிர்வாழும் உள்உணர்வு (Survival Instincts) தாம் வாழும் நாட்டிற்கு ஆதரவாகவும், அந்நிய நாட்டிற்கு எதிராகவும், தம்மை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக போராடும் நிலையை நோக்கி அவர்களை தள்ளுகிறது. இதன் மூலம் தேசப்பற்று (Patriotic Bond) என்ற பிணைப்பு ஏற்படுகிறது. இத்தகைய பிணைப்பு மிகவும் பலவீனமானதும், தாழ்ந்த தரத்திலுள்ளதுமாகும். மனிதர்களைப் போலவே இப்பிணைப்பு விலங்குகளிடமும், பறவைகளிடமும் காணப்படுவதுடன், இது உணர்ச்சி பூர்வமாகவும் வெளிப்படுகிறது. ஆக்கிரமிப்பு மூலமாகவோ அல்லது தாக்குதல்கள் மூலமாகவோ அந்நிய நாட்டவர்களின் அச்சுறுத்தல்களுக்கு தாய்நாடு ஆளாகாத நேரங்களில், தேசப்பற்று என்ற இந்த பிணைப்பு மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. அந்நியர்கள் தாய்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவுடன் அல்லது விரட்டி அடிக்கப்பட்டவுடன் இதன் தாக்கம் காணாமல் போய் விடுகிறது. ஆகவே, இந்தப் பிணைப்பு குறைந்த தரத்திலுள்ள பிணைப்பாகும்.
மேலும், குறுகிய சிந்தனை போக்கு மக்களிடம் இருக்கும் போது தேசியவாதத்தின் மூலமான ஏற்படுகின்ற பிணைப்பு (Nationalistic Bond - Raabitah Al Qawmiyyah) உருவாகின்றது. பரந்த நிலையில் உணரப்பட்டாலும்; கூட அடிப்படையில் இது ஒரு குடும்பப் பிணைப்பாகும். ஏனெனில், தனி மனிதர்களிடம் உயிர்வாழும் உள் உணர்வு ஆழமாக காணப்படும்போது மேலாதிக்கத்தின் மீதான மோகம் அவனுள் ஏற்படுகின்றது. இந்த மேலாதிக்க மோகம் என்பது அறிவு மட்டம் குறைந்த தனிமனிதர்களிடம் காணப்படுகின்றது. மேலும் இந்தத் தனி மனிதனின் விழிப்புணர்வு விரிவடையும்போது, அவனுடைய மேலாதிக்க மோகமும் விரிவடைகிறது. இவ்வாறு அவன் தனது குடும்பத்தின் மீதான ஆதிக்கத்தை கைகொள்கின்றான். அவனது விழிப்புணர்வு மேலும் விரிவடையும்போது, தன் தாய்நாட்டு மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு வழிகோலுகின்றான். இதை அவன் நிறைவேற்றிவிட்டால், பிறகு மற்ற மக்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு விழைகின்றான். முதலில் தனிமனிதனின் மேலாதிக்க மோகம் குடும்ப உறுப்பினர்களிடேயே சச்சரவு தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. இவ்வாறாக, குடும்பத்திற்குள் இடம்பெறும் ஆதிக்கப்போட்டி தீர்க்கப்பட்டுவிட்டால், பிறகு குடும்பங்களுக்கிடையில் சச்சரவுகள் உருவாகி ஒரு குடும்பத்திடமோ அல்லது பல குடும்பங்களின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவிடமோ ஆதிக்க சக்தி வந்தடைகிறது. இறுதியாக, இறைமைக்கும், உயர்தர வாழ்க்கைத்தரத்திற்குமாக இந்த மக்கள் ஏனைய மக்களுடன் முரண்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். ஆகவே இத்தகைய பிணைப்பால் பிணைக்கப்பட்டவர்களிடம் இனவாதம் (Tribalism - Asabiyyah) நிலைத்திருக்கிறது. இதன் விளைவாக, சலனங்களும் ஒரு இனத்துக்கு எதிராக மற்றொரு இனத்துக்கு உதவும் போக்கும் ஏற்படுகின்றது. முடிவாக, இத்தகைய பிணைப்பு (Bond) மனிதநேயத்திற்கு எதிரானதும், அந்நிய சச்சரவுகள் இல்லாத சந்தர்ப்பங்களில் உள்ளுர் சச்சரவுகளுக்கு (Local Conflict) வழிகோலக்கூடியதுமாகும்.

ஆகவே, கீழ்கண்ட மூன்று காரணங்களுக்காக தேசப்பற்று பிணைப்பு (Patriotic Bond) ஏற்றுக் கொள்ள முடியாதது. முதலாவதாக, இது மிக தாழ்ந்த நிலையிலுள்ள பிற்போக்கான பிணைப்பாகும். மறுமலர்ச்சியை நோக்கி மனிதனை இட்டுச் செல்வதற்கும், மனிதர்களுக்கிடையில் நல் உறவை ஏற்படுத்துவதற்கும் இது சிறந்தது அல்ல. இரண்டாவதாக, மனிதனின் உயிர்வாழும் உள்உணர்வினால் (Survival Instinct) அவன் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக, அவனது உணர்ச்சியால் உந்தப்பட்டு உருவாகின்ற பிணைப்பாகும். ஆகவே உணர்வின் அடிப்படையிலான இந்த பிணைப்பானது மாற்றத்திற்கும், மாறுபாடுகளுக்கும் உட்படக்கூடியதால், மனிதர்களிடத்தில் நிரந்தரமான பிணைப்பை ஏற்படுத்துவதற்கு இது பொருத்தமானது அல்ல. மூன்றாவதாக, பாதுகாப்பு அச்சுறுத்தல் தோன்றும் தருணங்களில் மட்டும் தோன்றக்கூடிய இந்த பிணைப்பு தற்காலிகமானதாகும். உறுதியான பாதுகாப்பு நிலை ஏற்பட்டுவிட்டால் இது மறைந்து விடக்கூடியது. ஆகவே, மனித சமூகத்திற்கு மத்தியில் நிலைபெறுவதற்கு தேசப்பற்றுப் பிணைப்பு (Patriotic Bond) பொருத்தமானதல்ல.
இதைப் போலவே தேசியவாத பிணைப்பும் (Nationalistic Bond) கீழ்கண்ட மூன்று காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. முதலாவதாக, இது இனவாத அடிப்படையிலுள்ள பிணைப்பாகும். எனவே மறுமலர்ச்சியை நோக்கிய மனித சமூகத்தை பிணைப்பதற்கு பொருத்தமாற்ற பிணைப்பாகும். இரண்டாவதாக, இப்பிணைப்பு மேலாதிக்க மோகத்தின் விளைவாக எமது உயிர்வாழும் உள் உணர்விலிருந்து தோன்றக்கூடிய ஒருவகை பிணைப்பாக இருக்கின்றது. மூன்றாவதாக, இது மனித நேயத்திற்கு பொருத்தமான பிணைப்பொன்றல்ல. ஏனெனில் மேலாதிக்கத்தை அடையும் நோக்கில் மனிதர்களுக்குள் சச்சரவுகளை இப்பிணைப்பு ஏற்படுத்துகிறது. ஆகவே, மனித சமூகத்திற்கு மத்தியில் நிலைபெறுவதற்கு இப்பிணைப்பு பொருத்தமானதல்ல.
மக்களின் மத்தியில் ஏற்புடையதற்ற இன்னும் சில பிணைப்புக்களும் காணப்படுகின்றன. இதற்கு சுயநலனை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற பிணைப்பு (Bond of Self Intrest - An - raabitah al - Maslahiyah) முறைமைகளை தோற்றுவிக்க முடியாத ஆன்;மீக பிணைப்பு (Spiritual Bond - Ar - raabitah al - ruhiyah) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சுயநல அடிப்படையில் எழுகின்ற பிணைப்பு தற்காலிகமானது. இது மக்களை ஒருங்கிணைப்பதற்கு பொருத்தமானதல்ல. ஏனெனில் அதிகளவில் உலகப் பயன்களை அடைய வேண்டுமென்ற முயற்சியில் இப்பிணைப்பு சமரசங்களுக்கு உட்படக்கூடியது. ஆகவே, சுயநலங்களுக்கு மனிதர்கள் முக்கியத்தும் கொடுக்க ஆரம்பிக்கும் போது இது தானாகவே மறைந்து விடுகிறது. தமது சுயநலங்களை செயல்படுத்த முயலும் வழிகளில் வேறுபாடு ஏற்படும்போதும், மனிதர்களுக்கிடையில் பிரிவு ஏற்பட்டு இப்பிணைப்பு இல்லாமல் போய்விடுகிறது. மேலும் அவரவர் சுயநலன்கள் நிறைவடையும்போது இந்த பிணைப்பு மறைந்து போய் விடுகிறது. ஆகவே, பின்பற்றுவதற்கு தகுதியில்லாத மிக ஆபத்தான பிணைப்பாக இது இருக்கிறது.
முறைமைகள் எதனையும் உள்ளடக்காத ஆன்மீக பிணைப்பு சன்மார்க்க உள்உணர்வு அடிப்படையில் (Religious Instincts) தோன்றுகிறது. ஆனால், எதார்த்த வாழ்க்கையில் இதன் நிலைபெறுதல் இருக்காது. ஆகவே, ஆன்மீக பிணைப்பு அரைகுறையானதும் நடைமுறைக்கு ஒத்துவராததுமாகும். வாழ்வியல் விவகாரங்களில் மனிதர்களுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு இது பொருத்தம் இல்லாதது. கிருஸ்தவத்தை தழுவியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் கிருஸ்தவ கோட்பாட்டைக்கொண்டு பிணைப்பை ஏற்படுத்த இயலாமல் போய் விட்டமை இதலாலேயேயாகும். ஏனெனில் கிருஸ்தவம் முறைமைகள் ஏதுமற்ற ஆன்மீக கோட்பாடாகும்.
இறுதியாக, மனிதர்களுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பொருத்தமான பிணைப்புகளாக மேற்கூறப்பட்ட எந்த பிணைப்பும் விளங்கவில்லை எனலாம். எனவே மானிட இனத்தை வாழ்வியலில் ஒருங்கிணைக்கவல்ல சரியான ஒரேயொரு பிணைப்பு, முறைமைகளை தோற்றுவிக்கக்கூடிய, அறிவார்ந்த அடிப்படை கோட்பாடான அகீதா (Aqeedah) விலிருந்து எழுகின்ற சித்தாந்தப் பிணைப்பாகும் (Ideological Bond Ar-raabitah al-Mabdaiyah).
சித்தாந்தம் (Ideology - Mabdah) என்பது அறிவார்ந்த அடிப்படை கோட்பாடாகும் (Aqeedah) அதிலிருந்து முறைமைகள் (System) தோன்றுகின்றன. அகீதா என்பது மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான சிந்தனையாகும். அது வாழ்க்கைக்கு முன்பு இருந்தது என்ன என்பது பற்றியும், வாழ்க்கைக்கு பின்பு என்ன வரப்போகிறது என்பது பற்றியும் இந்த உலக வாழ்க்கையோடு மேற்கூறப்பட்ட இரண்டு விஷயங்களுக்கும் மத்தியில் இருக்கும் தொடர்பு பற்றியும் உருவான அடிப்படை சிந்தனையாகும். அதே வேளையில் இது முழுமையான ஒரு சிந்தனையாகவும் இருக்கிறது. இந்த அகீதாவிலிருந்து பிறக்கும் முறைமைகளை எடுத்துக்கொண்டால் அவை மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும், அந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளையும், இந்த அகீதாவை பாதுகாக்கும் வழிமுறைகளையும், மற்ற மக்களுக்கு அதை பிரச்சாரம் செய்யும் வழிமுறைகளையும் கொண்டதாக இருக்கின்றன. தீர்வுகளை அமுல்படுத்தும் வழிமுறையும், அகீதாவை பாதுகாத்தலும், அதனை பிரச்சாரம் செய்வதும், வழிமுறையை (Method - Tareeqah) பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், அகீதாவும் அதிலிருந்து கிடைக்கும் தீர்வும் சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது (Fikrah -Thoughts). இதன்படி, சித்தாந்தம் (Ideology) என்பது சிந்தனையையும் (Thoughts - Fikrah) வழிமுறையையும் (Method Tareeqah) உள்ளடக்கியதாக இருக்கிறது.
தொடரும்...

No comments:

Post a Comment