உலக வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் எழுந்து வீழ்ந்திருக்கின்றன; எத்தனையோ சமுதாயங்கள் உயர்ந்து உச்சத்தை அடைந்த வேகத்தில் பின்னடைவு எய்தியிருக்கின்றன, ஆனால் கி,பி, எட்டாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய இஸ்லாமிய பேரரசு பல்வேறு கோணங்களில் வரலாற்றில் தனித்துவம் பெற்றதாக இருந்ததுபோல இஸ்லாமிய பேரரசின் சிற்பிகளாக விளங்கிய முஸ்லிம் சமுதாயமும் உலகில் தோன்றிய சமுதாயங்களில் தனித்துவம் பெற்ற சமுதாயமாக விளங்குகிறது.
பாலைவன பொட்டல் பூமியான அரேபிய தீபகற்பத்தில் அறியாமையின் அடர்ந்த இருளில் வாழ்ந்து கொண்டிருந்த அரபு மக்களிடம் இஸ்லாம் மறுமலர்ச்சியை கொண்டுவந்தது. இஸ்லாத்தின் ஒளியில் சீர்திருத்தம் அடைந்த அந்த மக்கள் மாபெரும் வீரர்களாகவும் மகத்தான அரசியல் விற்பன்னர்களாகவும் ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் தேர்ந்த ஈடு இணையற்ற உத்தமர்களாகவும் உயர்ந்து நின்றார்கள், இஸ்லாம் என்ற தீபத்தை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) முஸ்லிம்களிடம் ஒப்படைத்த நிலையில் ஹிஜ்ரி 13 ஆம் ஆண்டில் இவ்வுலகைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள், இஸ்லாத்தின் நுட்பங்களை அல்லாஹ்வின் தூதரிடமிருந்து(ஸல்) துல்லியமாக கற்றிருந்த முஸ்லிம்கள் அந்த இக்கட்டான சூழலில் விவேகமாக செயல்பட்டு அபூபக்கரை(ரலி) உம்மாவின் தலைவராக அதாவது கலீ*பாவாக தேர்வுசெய்தார்கள், இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகள். எதிர்ப்புகள். குழப்பங்கள். சதித்திட்டங்கள் ஆகியவற்றை அபூபக்கரின்(ரலி) தலைமையில் நின்று போராடி வெற்றி பெற்றார்கள், அன்று தொடங்கிய முஸ்லிம் உம்மாவின் வெற்றிப்பயணம் பதிமூன்று நூற்றாண்டுகள் தொடர்ந்து கொண்டிருந்தது, இஸ்லாத்தின் எதிரிகள் பின்னிய சதித்திட்டங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சிகள், வஞ்சக நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் முறியடித்து இஸ்லாமிய அரசு என்ற அரணின் பாதுகாப்பில் இந்த உம்மா வெற்றிநடை போட்டது, அவ்வப்போது சிறு குழப்பங்களும் பின்னடைவுகளும் ஏற்பட்டபோதும் அவற்றையெல்லாம் சீர்படுத்தி உலகின் முன்னணி சமுதாயமாக விளங்கியது, இந்நிலையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு அரணாகவும் அவர்களை ஓரணியில் வழிநடத்திச் செல்லும் தலைமை கேந்திரமாகவும் விளங்கிய கிலா*பா எனும் இஸ்லாமியஅரசு 1924 ல் எதிரிகளின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் முஸ்லிம் உம்மா சிதறடிக்கப்பட்டது. கிலா*பா அழிக்கப்பட்டு 85 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
ஓராயிரம் ஆண்டுகள் எதிரிகள் மேற்கொண்ட சூழ்ச்சிகள். இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் தீட்டிய சதித்திட்டங்கள். நயவஞ்சகர்களாக விளங்கிய முஸ்லிம் பெயர்தாங்கிகளின் துரோகம். சுயநலமிக்க ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம். உஸ்மானிய கிலா*பத்திற்கு எதிரான அரபுமக்களின் துவேஷம் இவையெல்லாம் கிலா*பா உடைந்துபோனதற்கு சில காரணங்கள் என்றபோதும் அதைவிட முக்கிய காரணிகள் சில இருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், முஸ்லிம் உம்மாவை மறுமலர்ச்சிக்கு இட்டுச்செல்வதை இலக்காக கொண்டு செயலாற்றும் விழிப்புணர்வு பெற்ற முஸ்லிம்கள் நிச்சயம் இவற்றை அறிந்துகொள்ள வேண்டும், அதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு படிப்பினை பெறவேண்டும், நம் முன்னோர்களான முஸ்லிம்களை குறைசொல்வதோ அல்லது குற்றம் பிடிப்பதோ நமது நோக்கமல்ல என்பதை தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம், அல்லாஹ(சுபு) அருள்மறை குர்ஆனில் முஸ்லிம்கள் படிப்பினை பெறும்பொருட்டு பல நபிமார்களின் வரலாறுகளை சொல்லிக் காட்டுகிறான். அதுபோன்று நாம் நமது முன்னோர்களான முஸ்லிம்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அதனை ஆய்வு செய்யவேண்டும், கடந்தகால தவறுகள் களைந்தெறியப்பட்ட புதிய சமுதாயம் ஒன்றை நிறுவி மறுபடியும் இஸ்லாத்தின் மகத்துவத்தை நிலைநிறுத்தவேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டவர்களுக்கு இத்தகைய ஆய்வுகள் நிச்சயம் தேவை.
அல்லாஹ்(சுபு) அருளிய சத்திய மார்க்கம் மேலோங்கவேண்டும். முஸ்லிம்கள் மறுபடியும் முழுமையான இஸ்லாமிய வாழ்க்கைமுறைக்கு திரும்பவேண்டும். இஸ்லாமியஅரசின் சீரிய தலைமையில் முஸ்லிம்கள் மறுபடியும் அணிவகுத்து நின்று அல்லாஹ்(சுபு) வழங்கிய இந்த மகத்தான செய்தியை(இஸ்லாத்தை) உலகின் கடைசி மனிதனுக்கும் எடுத்துச்சென்று மனித இனத்தை கு*ப்ரின் இருளிலிருந்து மீட்டு இஸ்லாத்தின் ரஹ்மாவிற்குள் கொண்டுவரவேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் இலட்சியம்.
முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்(சுபு) இஸ்லாத்தின் செய்தியை அறிவித்த அந்த தருணத்திலிருந்தே இஸ்லாத்திற்கும் அதனை பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் எதிரிகள் உருவாகிவிட்டார்கள், சந்தர்ப்பவாதிகள் நயவஞ்சகர்கள் உலக ஆதாயவாதிகள் ஆகியோர் முஸ்லிம்கள் மத்தியில் கலந்து இருந்துகொண்டு அவர்களின் துரோக செயல்களை அவ்வப்போது அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள், இஸ்லாத்தின் கொடிய எதிரிகள் தங்கள் செல்வங்களையும் ஆற்றல்களையும் மதிநுட்பங்களையும் ஒன்றிணைத்து முஸ்லிம் உம்மாவிற்கு எதிராக கடும்போரிட்டபோதும் அவர்களால் முஸ்லிம்களை முறியடிக்க முடியவில்லைõ அல்லாஹ்(சுபு) அவர்களின் திட்டங்களை சிலந்தி வலையாக ஆக்கினான் அவற்றை முஸ்லிம்கள் அறுத்து எரிந்துவிட்டார்கள், முஸ்லிம்கள் அல்லாஹ்(சுபு) மீதும் அவனுடையதூதர்(ஸல்) மீதும் இஸ்லாத்தின் மீதும் அசைக்க முடியாத ஆழமான ஈமான் கொண்டிருந்தவரையில் அவர்கள் வெல்ல முடியாத சமுதாயமாகவே விளங்கினார்கள், ஆனால் ஹிஜ்ரி எட்டாம் நூற்றாண்டு வாக்கில் சறுக்குதல் ஏற்பட்டது, இந்தியா. பாரசீகம். கிரேக்கம் ஆகிய நாடுகளின் கு*ப்ர் சிந்தனைகளான அந்நிய சிந்தனைகளில் கவர்ச்சியுற்று அவற்றை பயிலவும் அரபுமொழியில் அவற்றை மொழியாக்கம் செய்யவும் முற்பட்டார்கள், தொழிற்புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வியந்து பாராட்டியவர்களாக மதிமயங்கி நின்றார்கள், ஐரோப்பிய மக்கள்மீதும் அவர்கள் கலாச்சாரத்தின்மீதும் அவர்களின் கல்விமுறையின் மீதும் கவர்ச்சிகொள்ள துவங்கினார்கள், இதன்விளைவாக இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்படுகின்ற அந்நியகலாச்சாரம் இஸ்லாமிய மண்ணில் நுழைந்தது. கு*ப்ரான அந்நிய சிந்தனைகள் முஸ்லிம்களின் நெஞ்சங்களை ஆட்கொண்டன, சிறந்த சமுதாயமாக இருந்து உலகமக்களை வழிநடத்திச் சென்ற முஸ்லிம் உம்மா தனது சிறப்பை மறந்து தனது கடமையைத் துறந்து தனது பாதையை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தது. அன்று தொடங்கிய இந்த உம்மாவின் வீழ்ச்சி இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உலகமக்களை அநீதியிலிருந்தும் அச்சுறுத்தல்களிலிருந்தும் பாரசீக உரோம கொடுங்கோல் ஆதிக்கத்திலிருந்தும் மீட்டு அவர்களுக்கு வாழ்வளித்த இந்த சமுதாயம் இன்று தன்னையே பாதுகாத்துக் கொள்ள முடியாமல் தடம்புரண்டு தத்தளித்துக் கொண்டிருக்கிறது, என்றாலும்.இந்த உம்மாவிற்கு அல்லாஹ்(சுபு) அளித்துள்ள வாக்குறுதியும் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அறிவிப்பு செய்திருக்கும் நற்செய்தியும் நம்பிக்கை ஒளியாக நம் கண்முன்னே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
وَعَدَ اللَّهُ الَّذِينَ آَمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا
உங்களில் எவர் ஈமான்கொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களை அவர்களுக்கு முன்பிருந்தவர்களை ஆக்கிவைத்ததுபோல் பூமிக்கு ஆட்சியாளர்களாக ஆக்கிவைப்பதாகவும் இன்னும் அவன் அவர்களுக்கு பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைபடுத்துவதாகவும் அவர்களுடைய அச்சத்திற்கு பதிலாக அமைதியைக்கொண்டு மாற்றித் தருவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான், (அந்நூர் 24:55)
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
உங்கள் தீனின் துவக்கம் நபித்துவமாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கும். பிறகு நபித்துவத்தின் அடிச்சுவட்டில் நடக்கும் கிலா*பாகவும் இருக்கும்........... பிறகு நபித்துவத்தின் அடிச்சுவட்டில் மீண்டும் கிலா*பா ஏற்படும். (அஹ்மது)
சிதறுண்டு கிடக்கும் முஸ்லிம்களை ஒன்றிணைத்து அவர்களின் கடந்தகால மகத்துவமிக்க நிலைக்கு இட்டுச் செல்வதற்கும் அவர்களிடம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி நபித்துவத்தின் அடிச்சுவட்டில் மீண்டும் கிலா*பாவை நிறுவுவதற்கும் இஸ்லாத்தின் மகத்தான செய்தியை உலகெங்கிலும் எடுத்துச்செல்வதற்கும் உம்மாவின் விழிப்புணர்வு பெற்ற அதன் வீரப்புதல்வர்கள் ஆர்ப்பரித்து எழுந்துவிட்டார்கள். இஸ்லாத்தின் சங்கநாதத்தை ஓங்கி ஒலித்தவர்களாக அணிவகுத்து நின்றுவிட்டார்கள். விடியலின் வெளிச்சம் மெல்ல மெல்ல எழுந்து உயர்ந்துகொண்டிருக்கிறது. அல்லாஹ்(சுபு) மீதும் இஸ்லாத்தின்மீதும் முஸ்லிம் உம்மா கொண்டுள்ள ஈமான் துருப்பிடித்த இரும்பல்ல அது நீறுபூத்த நெருப்பு என்பதை அகிலத்தார் அறிந்துகொள்ளும் அந்தநாள் தொலைவில் இல்லை.
No comments:
Post a Comment