Friday, April 24, 2009

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 2

திருக்குர்ஆன் உருவாக்கிய ஒப்பற்ற சமுதாயம்

இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டிட வேண்டும். இஸ்லாத்தின் ஒளியில் முஸ்லிம்களைப் புனரமைத்திட வேண்டும் என் விழைவோர், ஓர் வரலாற்று உண்மையை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இது இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்திடவும் முஸ்லிம்களை முறையாகப் பயிற்றுவித்திடவும் பெரிதும் பயன்படும். வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தில் இந்தத் திருத்தூது இஸ்லாம் ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கிற்று. அந்த சமுதாயம் நபிகள் பெருமான்(ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற முதல் சமுதாயம் தான். இந்த முதல் சமுதாயத்தைப் போன்றதொரு சமுதாயத்தை வரலாற்றின் பிந்தைய காலக்கட்டத்தில் ஏன் மனித வரலாற்றின் எந்தக் காலக்கட்த்திலும் நாம் சந்திக்கவில்லை. இஸ்லாமிய வரலாற்றின் ஓட்டத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில மனிதப் புனிதர்கள் தோன்றுகின்றார்கள் என்றாலும் அந்த முதல் சமுதாயத்தைப் போன்றதொரு சமுதாயத்தை நாம் வரலாற்றில் சந்திக்கவே இயலவில்லை. அந்த முதல் சமுதாயத்தை உருவாக்கியவை இரண்டு பெரும் பொக்கிஷங்கள் அவை திருக்குர்ஆன் மற்றும் பெருமானார்(ஸல்) அவர்களின் சொல், செயல். இந்தத் திருக்குர்ஆன் அன்றுபொல் இன்றும் நம்மிடம் அப்படியே இருக்கின்றது. அது போலவே எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அணுவும் திரிபடாமல் நம்மிடம் இருக்கின்றது. சிலர் இப்படிக் கருதலாம் அன்று அந்த முதல் சமுதாயத்தினரிடையே எம்பெருமானார்(ஸல்) அவர்கள் இருந்தார்கள் இன்று நம்மிடையே அவர்கள் இல்லையே. இஸ்லாம் என்ற இந்த இறைவழிகாட்டுதல் நிலைநாட்டப்படவும் பலன்தரவும் பெருமானார்(ஸல்)அவர்கள் இருந்திட வேண்டியது நிரந்தரதேவை என்றிருந்திருந்தால் அல்லாஹ் இஸ்லாம் தான் இந்த உலகம் உள்ளவும் மனித இனத்திற்கு உள்ள இறுதி இறைவழி காட்டுதல் என்றாக்கி இருக்கமாட்டான். திருக்குர்ஆனை அறுதி நாள் வரை அப்படியே பாதுகாத்திடும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொணடிரு;கின்றான். ஏனெனில் அவன் நன்றாக அறிவான் இந்த இஸ்லாம் இந்த இறைவழிகாட்டுதல்கள் பெருமானார்(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னாலும் பலன் தரும். நிலைநாட்ட முடியும் (என்பதை இறைவன் நன்றாக அறிவான்) அதனால் தான் அந்தக் கருணையாளன் இறைவன் அந்த மனித மாண்பாளரைத் தன் கருணையின் பக்கம் அழைத்துக் கொண்டான். அதனால்தான் இந்த இஸ்லாத்தை இறைவனின் வழிகாட்டுதலை இந்த உலகம் உள்ளவரை மனிதனின் அறுதியான வழிகாட்டுதல் என அறிவித்தான். எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் நம்மிடையே அப்படியே இருக்கும் போது பெருமானார்(ஸல்) அவர்கள் நம்மிடையே இல்லை என்பது நாம் நமது பொறுப்புக்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு கண்டெடுத்த வாதமே. இதனால் வரலாற்றில் அந்த முதல் சமுதாயத்தைப் போல் இன்னொரு சமுதாயம் அமையாமல் போனதற்கு வேறு காரணங்கள் உண்டு என்பதை நம்மால் உணர முடிகின்றது. இதனை ஆழ்ந்து கவனித்திடும் போது பல உண்மையான காரணங்கள் நமக்குத் தெரிகின்றன.


முதற்காரணம் : இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் உற்றத் தோழர்கள் தங்கள் தாகம் தணித்திட்ட முதல் தடாகம் திருக்குர்ஆன் தான் திருக்குர்ஆன் மட்டுந்தான். நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்வு வாக்கு என்பவையெல்லாம் இந்தத் தடாகத்தின் ஊற்றிலிருந்து பிறந்தனவே. ஆகவே தான் நம்பிக்கையாளர்களின் தாய் ஆயிஷா(ரலி)அவர்களிடத்தில் இறைவனின் தூதர் நபிகள் பெருமானார்(ஸல்)அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? என வினவப்பட்ட போது நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்க்கை திருக்குர்ஆனாக இருந்தது எனப் பதில் கிடைத்தது – அந்நஸயீ. அவர்கள் அப்படித் தங்களைத் திருக்குர்ஆனிடம் ஒப்படைத்து அதன் வழியில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதற்கான காரணம் அவர்களுக்கு அன்றைய சூழ்நிலையில் வழிகாட்டுவதற்கு வேறு மார்க்கங்களோ வழிகாட்டுதல்களோ நெறிமுறைகளோ இல்லை என்பதனால் அல்ல. அன்று


· அந்த மக்களிடையே ரோம நாட்டின் சட்டதிட்டங்கள் பண்பாடுகள் சித்தாந்தங்கள் சிந்தனைப் போக்குகள் இவையனைத்தும் இருக்கவே செய்தன.


· இந்த ரோம நாட்டுச் சட்டதிட்டங்களும் பண்பாடுகளும் தான் இன்று பீடுநடைபோடும் ஐரோப்பிய பண்பாடுகளின் அடிப்படைகள் எனப் போற்றப்படுகின்றன.


· அதே போல் கிரிஸ் நாட்டுப் பண்பாடுகளும் தத்துவங்களும் அறிவு விளக்கங்களும் அந்த மக்களிடையே பழக்கத்திலிருக்கவே செய்தன.


· பாரசீகத்துப் பண்பாடுகள் கலைகள் கொள்கைகள் மதவழிபாடுகள் அரசு முறைகள் இவையும் அந்த மக்களின் கைகளுக்கு எட்டவே செய்தன.


· சீனத்துச் சிந்தனைகளும்


· இந்தியாவின் புனஸ்காரங்களும் அந்த மக்களின் பார்வையில் படவே செய்தன.


· ய10தர்களின் பழக்கவழக்கங்களும்


· கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கைகளும் அவர்களிடையே செயலில் இருந்தன.


ஆகவே அந்த முதல் இலட்சியத் திருக்கூட்டம் திருக்குர்ஆனை மட்டுமே தங்களைத் தயாரிக்கும் ஆலையாக எடுத்துக் கொண்டது என்றால் வேறு கொள்கைகளோ கோட்பாடுகளோ வழிமுறைகளோ அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல. அவர்கள் வேற்றுக் கொள்கைகள் அவர்களை வழிநடத்துவதை விரும்பவே இல்லை. இதனால் தான் அன்று உமர்(ரலி) அவர்கள் தௌராத் வேதத்திலிருந்து சில வரிகளை எடுத்துக் காட்டியபோது இறைவனின் இறுதித் தூதர் நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் இறைவனின் பெயரால், நபி மூஸா(அலை) அவர்களே உங்களோடு இருந்தால் அவர்களுக்கும் என்னைப் பின்பற்றுவதைத்தவிர வேறு வழி இருந்திருக்காது என்று தெளிவு படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சி நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் அந்த முதல் சமுதாயத்தினரை முழுக்க முழுக்க இந்த இறைமறையாம் திருமறையிலேயே தோய்த்தெடுத்தார்கள். அவர்களை வேறு எந்தப் பாசறையிலும் பயிற்றுவிக்க விரும்பவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அதனால் தான் உமர்(ரலி) அவர்கள் திருக்குர்ஆனுக்கு அப்பாற்பட்ட ஒரு வழிகாட்டுதலை எடுத்துக்காட்டிய போது தனது அதிருப்தியை வெளிக்காட்டினார்கள் நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள். இதையே வேறு சொற்களால் சொன்னால் இறைவனின் இறுதித் தூதர் நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் எண்ணத்தில் நினைப்பில் வாழ்வில் தூய்மையானதோர் சமுதாயத்தை உருவாக்க விரும்பினார்கள். அந்தத் தூய்மையான சமுதாயம் திருக்குர்ஆன் எனும் தூய்மையான பாசறையில் பயிற்சி பெறவேண்டும் என்று விரும்பினார்கள். ஆகவே அந்த முதல் சமுதாயத்தினர் வரலாற்றில் இணையற்றதோர் சமுதாயமாக இலங்கினார்கள். ஆனால் இதற்குப் பின்னால் வந்த சமுதாயத்தினர் திருக்குர்ஆனை மட்டுமல்லாமல் இதரக் கொள்கைகளிடமும் அடைக்கலம் தேடினார்கள். இவர்கள் தங்களைச் சுற்றி இருந்த சித்தாந்தங்களுக்கும் சிந்தனைப் போக்குகளுக்கும் தங்களை அடிக்கடி ஆட்படுத்திக் கொண்டார்கள். கிரேக்க நாட்டுத் தத்துவங்கள். பாரசீகத்துப் பெருங்கதைகள் ய10தர்களின் பழக்க வழக்கங்கள், கிறிஸ்தவ மத நம்பிக்கைகள் இவையெல்லாம் இந்தப் பிந்தைய சமுதாயத்தினரின் சிந்தனையைப் பாதித்தன. பின்னர் இவர்கள் திருக்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் தந்தபோது இந்த மாற்றுச் சிந்தனைகளின் தாக்கமும் உடனிருந்தன. பிந்தைய சமுதாயத்தினர் இந்த மாற்றுச் சிந்தனைகளுள் விரவிவந்த விளக்கங்களில் தங்களைத் தயாரித்துக்கொண்டதால் அவர்கள் அந்த முதல் சமுதாயத்தினரைப்போல் இருக்கவில்லை. இதை நாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லலாம்.


இரண்டாவது காரணம் : பின்னாளில் வந்த சமுதாயத்தினர் அந்த ஒப்புவமையற்ற முதல் சமுதாயத்தினரைப் போலல்லாமற் போனதற்கு இன்னொரு அடிப்படைக் காரணமும் உண்டு. அது திருக்குர்ஆனிலிருந்து பாடமும் படிப்பினையும் பெறும் பாங்கினைக் குறித்தது. அந்த முதல் சமுதாயத்தினர் வெறுமனே ஓசையிட்டு ஓதிவிட்டு ஒதுக்கி வைக்கின்ற ஒன்றாகத் திருக்குர்ஆனை அணுகவில்லை. அதே போல் சில பல புதிய தகவல்களைத் தருகின்ற தகவல் பெட்டகம் என்ற நிலையிலேயும் அவர்கள் திருக்குர்ஆனை அணுகவில்லை. அதே போல் சில விஞ்ஞானப் புதிர்களை அவிழ்க்கும் நூலாகவும் அவர்கள் திருக்குர்ஆனை அணுகவில்லை. அவர்கள் திருக்குர்ஆனின் பக்கம் திரும்பியதெல்லாம் தங்களது வாழ்வை எப்படி வழிநடத்த வேண்டும் என் அல்லாஹ் கட்டளை இடுகிறான் என்பதைத் தெரிந்து உடனேயே நடைமுறைப்படுத்துவதற்காகவே. போர்க்களத்தில் முன்வரிசையிலே நிற்கும் ஓர் போர் வீரன் தனது முதன்மை தளபதியிடமிருந்து என்னக்கட்டளை வரும் என்ன வழிகாட்டுதல் வரும் என எப்படி எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பானோ, இனி அந்தக் கட்டளைகள் வந்ததும் நிமிடமும் தாமதப்படுத்தாமல் எப்படிச் செயல்படுவானோ.. அதே போல் தான் அந்த மக்கள் திருமறையின் கட்டளைகளுக்குக் காத்துக்கிடந்தார்கள். அந்தக் கட்டளைகள் கிடைத்தவுடன் சற்றும் தயக்கமோ தாமதமோ காட்டாமல் அந்தக் கட்டளைகளை அசைபோட்டுக் கொண்டிருக்காமல் செயல்படுத்தினார்கள். அதாவது தங்கள் வாழ்வை அந்த வழிகாட்டுதல்களின் வழி அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் ஒரே நேரத்தில் ஏகமாய் அமாந்து பல வசனங்களை அல்லது பல அத்தியாயங்களை ஓதுவதில்லை காரணம் அப்படிச் செய்தால் ஒரே நேரத்தில் பல பொறுப்புக்களை தாங்கள் சுமந்திட வேண்டியது வரும் என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். மிக அதிகமாக அhவ்கள் பத்துத் திருக்குர்ஆன் வசனங்களையே ஓதுவார்கள். மனதிற் நிறுத்திக் கொள்வார்கள். அவற்றின் வழியில் தங்கள் வாழ்வை வடிவமைத்துக்கொள்வார்கள். இப்படித்தான் அவர்கள் திருக்குர்ஆனை அணுகினார்கள் என்பதை நாம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)அவர்கள் வழியாக அறிகின்றோம். திருக்குர்ஆனின் கட்டளைகள் வாழ்க்கையில் செயல் படுத்திடத்தான் என்ற உணர்வால் உந்தப்பட்டு அவர்கள் திருக்குர்ஆனின் கட்டளைகளைச் செயல்படுத்திய செயல்பாட்டு ஓட்டத்தி;ல் அவர்கள் திருக்குர்ஆன் அள்ளித்தந்த அறிவுப் பொக்கிஷங்களை அள்ளிப்பருக்pனார்கள். அதே போல் திருக்குர்ஆன் வழங்கிய இலக்கிய நயங்களை ரசித்தார்கள் சுவைத்தார்கள். அந்த முதல் தலைமுறையினர் திருக்குர்ஆனை ஓய்வாக அமர்ந்து ஒய்யாரமாய்ப் படித்து ரசித்திடத்தான் என்ற அடிப்படையில் அணுகி இருப்பார்களேயானால் அவர்கள்


· இறைவனை அஞ்சி வாழ்வதில்
· வேறு யாருக்கும் அஞ்சாது வாழ்வதில்
· ஒழுக்கத்தில்
· நீதியை நிலைநாட்டுவதில்
· தீமைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்திடுவதில்
· பிறர் உரிமைகளைப் பேணி நடந்திடுவதில்
· வழங்கி வாழ்வதில்
· வீரத்தில் விவேகத்தில்


அத்தகையதொரு ஈடிணையற்றச் சமுதாயமாக உருவாகி இருக்க இயலாது. திருக்குர்ஆனின் கட்டளைகள் தங்கள் வாழ்வை வடிவமைத்திட என்ற விழிப்புடன் அவர்கள் திருக்குர்ஆனை அணுகியதால் திருக்குர்ஆனின் போதனைகளைச் செயல்படுத்தித் தங்கள் வாழ்வை வடிவமைத்திடுவது அவர்களுக்கோர் பளுவாகத் தோன்றிடவில்லை. மகிழ்ச்சியான சாதாரண நடைமுறை சாத்தியமாகவே பட்டது. இதனால் அவர்கள் திருக்குர்ஆனின் கட்டளைகளின் நடமாடும் விளக்கங்களாக வாழ்ந்தார்கள். சிலரது அறிவில் வாழும் வழிகாட்டுதல்களாகவோ நூல்களில் வாழும் சித்தாந்தங்களாகவோ திருக்குர்ஆனின் கட்டளைகள் இருந்திடவில்லை. திருக்குர்ஆனின் கட்;டளைகள் அந்த மக்களின் வாழ்க்கையில் வெளிப்படும் வழிகாட்டுதல்களாக வாழ்ந்தன. அவர்கள் திருக்குர்ஆன் போதித்த நம்பிக்கையின் கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாக மிளிர்ந்தார்கள். இதனால் தான் அவர்களின் வாழ்க்கை மட்டும் மாறிப்போய் விடவில்லை. மனித இனத்தின் வரலாறே மாறிப்போய் விட்டது.


தங்கள் வாழ்வை திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்களின் வழி அமைத்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு அணுகுகின்றவர்களிடம் மட்டுமே திருக்குர்ஆன் தன் இரகசியங்களையும் அழகையும் வனப்பையும் திறந்து காட்டும்.


இன்னும் சொன்னால் திருக்குர்ஆன் வரலாற்றுக் குறிப்புகளின் பெட்டகமாகவோ விஞ்ஞான உண்மைகளை விளம்பும் குறிப்பிடமாகவோ இலக்கிய நயத்தில் இணையற்று இலங்கிட வேண்டும் என்பதற்காகவோ அருளப்பட்டதன்று. அது வாழ்க்கையை வடிவமைக்கும் வழிகாட்டுதல்களின் தொகுப்பு. இந்த வகையில் அது வரலாற்று குறிப்புகளையும், விஞ்ஞான உண்மைகளையும் கவின்மிகு இலக்கிய நடையையும் நயங்களையும் கொண்டது. திருக்குர்ஆன் எந்த வாழ்க்கை நெறி வாழ்க்கை முறை அல்லாஹ்வின படைத்தவனின் அங்கீகாரம் பெற்றது (என்பதை எடுத்துச்சொல்வது) அந்த மனிதர்களை நடமாடும் திருக்குர்ஆனின் வசனங்களாக ஆக்கிட வேண்டும் என்பதை மனதிற்கொண்டு அல்லாஹ் தன்னுடைய வழிகாட்டுதல்களை அந்த மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக அருளிச் செய்தான். அல்லாஹ் தன் அருள்மறையில் இதுபற்றி இப்படிக் கூறுகின்றான்.

மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்தக் குர்ஆனைப் பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதனைச் சிறுகச்சிறுகவும் இறக்கி வைத்தோம் - அல்குர்ஆன் (17:106)


திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள அத்தனை வசனங்களும் ஒரே நேரத்தில் ஒரேயடியாக இறக்கப்பட்டவையன்று. அவை அவ்வப்போது அந்த மக்களின் தேவைக்கேற்ப அருளப்பட்டவை. ஒரு வசனம் அல்லது ஓரிரு வசனங்கள் அந்த மக்களிடையே தோன்றிய சிறப்பான சூழ்சிலை குறித்து அருளப்படும். சில வினாக்கள் அந்த மக்களிடையே எழுந்தபோது திருக்குர்ஆன் வசனம் அல்லது வசனங்கள் அருளப்பட்டு அந்த மக்களின் ஐயங்கள் அகற்றப்பட்டன. இதனால் அவர்கள் செயற்களத்தில் எந்த நெருடலும் இல்லாமல் தொடர்ந்து இருந்து வந்தார்கள். இப்படி அந்த மக்கள் திருக்குர்ஆன் வசனங்களின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் வாழ்ந்து வந்தார்கள். இதனால் அந்த மக்களது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களின் வழி அமைந்து கொண்டிருந்தது. அவர்கள் வானவர்கள் புடைசூழ அல்லாஹ்வின் அழகிய அடியார்களாக வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் அன்பான வழிகாட்டுதல்கள் வழி அவர்கள் வாழ்ந்ததால் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருளும் அனுகூலங்களும் கிடைத்துக் கொண்டே இருந்தன. இதனை அவர்கள் உணர்ந்தார்கள். அகம் மகிழ்ந்து அல்லாஹ்வின் கட்டளைகளைக் காத்திருந்து காலந்தவறாமல் கடைப்பிடித்து வாழ்ந்தார்கள். ஆகவே நபிகளார்(ஸல்)அவர்களின் உற்றத் தோழர்கள் திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்கள் வாழ்ந்து காட்டுவதற்கே என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட்டார்கள். ஆனால் பிந்தைய தலைமுறையினர் திருக்குர்ஆனை ஓர் இலக்கிய நூல் என்றும் சில விஞ்ஞான உண்மைகளை அறியத்தரும் நூல் என்றும் அணுகினார்கள். ஆதலால் தான் இந்தப் பிந்திய தலைமுறையினரால் அந்த முதல் தலைமுறையினரைப் போல் தலையெடுத்து நிற்க இயலவில்லை.


மூன்றாவது காரணம் : பெருமானார்(ஸல்)அவர்களின் காலத்தில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் அந்தக்கணம் முதல் அவர் இஸ்லாம் அல்லாத தனது பழைய பழக்கவழக்கங்களிலிருந்து தனது முந்தைய சிந்தனைகளிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொள்வார். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பது தனது வாழ்க்கையை முற்றாக மாற்றியமைத்துக் கொள்வதாகும் என்பதை நன்றாக உணர்ந்தார். தன்னுடைய முந்தைய வாழ்க்கை நிகழ்வுகளை எண்ணி எண்ணி வேதனைப்பட்டார். அறியாமையால் தான் செய்த தவறான செயல்களை எண்ணி உள்ளமெல்லாம் நொந்தார். அந்தப் பழைய பழக்கங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் கில்லி எறிந்தார். திருக்குர்ஆனின் ஒளியில் தனது வாழ்வை வடிவமைத்துக் கொண்டிருக்கும் போது எப்போதாவது தங்கள் மனம் அந்தப் பழைய இருண்ட நாள்களின் பக்கம் திரும்பினால் இந்த நேர்வழியிலிருந்து தாங்கள் சற்றேனும் தடம் மாறிட நேரிட்டால் தாங்கள் ஒரு பெரும் பாவத்தைச் செய்து விட்டதாகப் பதறினார்கள். பரிதவித்தார்கள் ஓடோடிச் சென்று பாவமன்னிப்பிற்காக மன்றாடினார்கள். இதனை அவர்கள் தங்கள் அடிமனதின் ஆழத்திலிருந்து செய்தார்கள். பின்னர் தங்கள் வாழ்வை திருக்குர்ஆனின் வழிகாட்டுதலின் வழி மாற்றிக் கொள்வார்கள். அவர்கள் தங்களைப் பிணைத்திருந்த அத்தனையையும் துறந்து திருக்குர்ஆனின் வழிகாட்டுதலுக்குள் தஞ்சம் புகந்த பின்னர் தங்களுடைய முந்தைய வாழ்விலிருந்து தங்களை முற்றாக விடுவித்துக் கொண்டார்கள் என்பது மட்டுமல்ல திருக்குர்ஆனின் நிழலில் தங்களது வாழ்க்கை அடி முதல் முடி வரை மாறிப்போய் விட்டதைக் கண்டார்கள். இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்ட நாள் முதல் அவர்கள் திருக்குர்ஆனின் நடமாடும் விளக்கங்களாக மாறினார்கள். ஜாஹிலிய்ய நாள்களின் பழக்கவழக்கங்கள் அறியாமை காலத்து இஸ்லாத்திற்கு முந்தைய காலத்து பழக்கவழக்கங்களை பண்பாடுகளை கொள்கைகளை கோட்பாடுகளை விட்டுவிடுவது தான் பல தெய்வ கொள்கையிலிருந்து விடுபடுவது என்று பொருள்படும். பின்னர் தம் வாழ்வை திருக்குர்ஆனின் வழியில் மட்டும் அமைத்துக் கொள்வது தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்று பொருள்படும்.

இதை அந்தத்தலைமுறையினர் நன்றாக அறிந்திருந்தார்கள். இப்படி அறியாமைக் காலத்துப் பழக்கவழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்திடவும் இஸ்லாத்தில் திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்களில் தங்களை முற்றாகப் பிணைத்திடுவதிலும் ஏற்படும் இழப்புகளை இன்னல்களை அவர்கள் இன்முகங்காட்டி வரவேற்றார்கள். அதில் அவர்கள் கிஞ்சிற்றும் கவலை கொள்ளவில்லை. நம்மைச் சுற்றியும் மௌட்டிகக் கொள்கைகள் பல தெய்வக் கொள்கைகள் மண்டிக் கிடக்கின்றன. அத்தோடு அறைகூவி அழைக்கவும் செய்கின்றன. இந்த அறியாமையை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் அன்றைய நிலையைவிட சற்று வலுவாக நம்மை வளைத்துப் பிடித்துள்ளன. இத்தோடு நில்லாமல் நம்மைச் சுற்றியிருக்கும் சுற்றுப்புறச்சூழல் அறியாமையில் புரையோடிக் கிடக்கின்றது. ஏன் அவை அறியாமையின் அசைக்கவியலாத பிடியில் சிக்குண்டு கிடக்கின்றன.

இந்த அறியாமையை அடிப்படையாகக் கொண்ட சூழ்நிலையின் தாக்கம் நமது எண்ணங்களில் நமது சிந்தனைகளில் நமது பழக்க வழக்கங்களில் நமது இங்கிதங்களில் நமது பண்பாட்டில் நமது கலாச்சாரத்தில் நமது கலையில் நமது இலக்கியங்களில் நமது நடைமுறை சட்டங்களில் திட்டங்களில் நிறைந்து காணப்படுகின்றது. எந்த அளவிற்கு என்றால் இவற்றில் பலவற்றை அதாவது இஸ்லாத்திற்கு எதிரான அறியாமையை அடிப்படையாகக் கொண்டவற்றை நாம் இஸ்லாம் என்று சொல்லிச் செயல்படுத்திடும் அளவிற்கு இவற்றின் தாக்கம் நம்முன் ஊடுருவிவிட்டது. இதனால் தான் பல இஸ்லாமிய எண்ணங்களும் கோட்பாடுகளும் நம் இதயங்களுக்குள் நுழைய மறுக்கின்றன. இதனால் தான் நமது உள்ளங்கள் இஸ்லாத்தின் போதனைகளால் விழிப்படையவும் விரிவடையவும் இயலாமற் போய்விட்டன. இப்படி மாற்றுச் சித்தாந்தங்களும் வேற்றுக் கொள்கைகளும் நம்முள் ஊடுருவி நிலைபெற்று விட்டதால்தான் நம்மால் அந்த முந்தைய சமுதாயத்தினரைப் போன்றதொரு சமுதாயமாக உருவாகிட இயலவில்லை. ஆகவே நாம் நமது பணியின் முதற்கட்டமாக இஸ்லாத்திற்கு எதிரான பழக்க வழக்கங்களையும் கொள்கைக் கோட்பாடுகளையும் விட்டொழிந்திட வேண்டும். இஸ்லாம் அல்லாத இந்த அறியாமைக் காலத்து சூழ்நிலைகளிலிருந்தும் அவை ஏற்படுத்திய நிறுவனங்களிலிருந்தும் நாம் பல பலன்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அவற்றையும் விட்டுவிட்டு நாம் வெளியே வந்தாகவேண்டும் இவற்றால் நமக்கு எத்துணைப் பெரிய இழப்புகள் ஏற்பட்டாலும் சரியே இன்றைய இஸ்லாமிய இயக்கங்களின் முதல் தேவையும் இதுவே. அந்த முதல் சமுதாயத்தினரைப் போலவே நாம் வழி காட்டுதல் பெறும் அடிப்படைகளாக திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்களைக் கொள்ள வேண்டும்.


அல்லாஹ் எந்தவித வழிகாட்டுதல்களை இறுதிநாள் வரை பாதுகாப்பதைத் தன் பொறுப்பு என ஏற்றுக்கொண்டானோ அந்த வழிகாட்டுதலின் பக்கம் திரும்பியாக வேண்டும்.


திருக்குர்ஆன் என்ற இந்த அறுதி வழிகாட்டுதல்


· நாம் இந்த உலகை எப்படி அணுகிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றதோ
· இந்த உலக வாழ்க்கையை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றதோ
· நாம் நமது கொடுக்கல் வாங்கல்களை எப்படி நடத்திட வேண்டும் என எதிர்பார்க்கின்றதோ அப்படியே நமது வாழ்வை நாம் வடிவமைத்திட வேண்டும். இன்னும் நாம் எப்படிச் சிந்திக்க வேண்டும்

செயல்பட வேண்டும் என்பவையெல்லாம் இந்த அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களிலிருந்தே பெறப்பட வேண்டும். இதில் நம்மைச் சுற்றியுள்ள அறியாமையை (இஸ்லாம் அல்லாதவை)அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் எள்முனை அளவு கூட தங்கள் தாக்கத்தை ஏற்படுத்திவிடாமல் தடுத்திட வேண்டும். திருக்குர்ஆன் என்ற இந்தத் தூய்iமாயன வழிகாட்டுதலின் பக்கம் திரும்பிடும்போது அதன் வழிகாட்டுதல்களை அறிந்திட வேண்டும். அறிந்ததை அப்போதே அந்தக் கணமே அப்படியே செயல்படுத்திட வேண்டும். செவியில்பட்டதைச் செயலில் கொண்டுவந்தோம் என் வாழ்ந்திட வேண்டும். விவாதங்கள் செய்திட வேண்டும். அந்த விவாதம் தரும் இதத்தில் சுகங்காண வேண்டும் என்ற எண்ணங்கள் எங்கேயும் எந்த நிலையிலும் தலைகாட்டிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் நாம் எத்தகைய மனிதராக ஆகவேண்டும் எனத் திருக்குர்ஆன் எதிர்பார்க்கின்றதோ அத்தகையதோர் மனிதனாக நாம் மாறிட வேண்டும். இப்படி நம்மையும் நாம் சார்ந்த சமுதாயத்தையும் திருக்குர்ஆனின் வழியில் வடிவமைத்திடும் பாதையில் திருக்குர்ஆன் தரும் இலக்கிய நயம் சொற்சுவை எதுகை மோனையின் இயல்பான இணைப்பு. திருக்குர்ஆன் சொல்லும் வரலாற்று உண்மைகள் சமுதாயங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய குறிப்பான புதுமையான சுவைதரும் செய்திகள், திருக்குர்ஆனின் தர்க்கத்திறமை, எதிர்ப்போரை வாகைகாண அது எடுத்துவைக்கும் எதிர்வாதம், மறுமை என்ற இறப்பிற்குப் பின்னால் வரும் வாழ்க்கையின் இரகசியங்கள் சுவர்க்கத்தின் வனப்பு இவையெல்லாம் எதிர்ப்படும்.

இவற்றையெல்லாம் அனுபவித்துக் கொண்டே நாம் நம்மை நமது சமுதாயத்தை அதன்வழியில் வார்த்திடும் தலையாயப் பணியைத் தடுமாறாமல் செய்திட வேண்டும். இந்த மகத்தான பணியை நம்மைச் சீரமைப்பது திருக்குர்ஆனின் பாதையில் வடிவமைப்பது என்பதில் ஆரம்பித்து இந்த (ஜாஹிலிய்யா)அறியாமையில் உழலும் (இஸ்லாம் அல்லாத சமுதாயத்தை)சமுதாயத்தின் அடிப்படையையே மாற்றி, அதனையும் இஸ்லாமிய மயமாக்கிவிடுவது என்பதில் முடிந்திட வேண்டும். இந்த இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்துவதின் முதல் அடியாகத்தான் நம்மை இந்த (இஸ்லாம் அல்லாத)அறியாமைத் தத்துவங்களின் எல்லாவிதமான தாக்கங்களிலிருந்தும் விடுவித்திட வேண்டும். இதில் இந்த இஸ்லாத்திற்குப் புறம்பான கொள்கைகளின் தற்காலிகக் கவர்ச்சி எத்துணை அலங்காரமானதாக இருந்தாலும் அதனை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவற்றோடு ஊசிமுனை அளவுக்குக்கூட நாம் சமரசம் செய்திடக்கூடாது. நமது பாதை வேறு, அதன் பாதை (இஸ்லாம் அல்லாத இதரக் கொள்கைகளின் பாதை) வேறு. நாம் அவற்றின் வழியில் கடுகளவு தூரமே சென்று விட்டால் கூட நாம் நமது இலட்சியத்தில் முழுமையாகத் தோல்வியடைந்து விடுவோம். (அல்லாஹ் காப்பாற்றட்டும்). இன்றைய சூழ்நிலையில் இந்தப் பாதையில் (திருக்குர்ஆனின் பாதையில்) மட்டுமே நாம் பயணத்தைத் துவங்கினால், எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாகுவோம். நாம் கடுமையான விலைமதிப்பற்றத் தியாகங்களைச் செய்திட வேண்டியது வரும். இதையெல்லாம் நாம் நன்றாக அறிவோம். ஆனால் நாம் ஒப்புவமையற்ற அந்த முதல் சமுதாயத்தைப் போல் ஆகிவிட வேண்டும் என்றால் இதைத்தவிர நமக்கு வேறு வழியே இல்லை. ஆகவே இஸ்லாமிய எழுச்சியை ஏற்றிவைக்கும் முதல் நடவடிக்கையாக நாம் பெருமானார்(ஸல்)அவர்களின் உற்றத் தோழர்களைப் போல் இஸ்லாம் அல்லாதவற்றிலிருந்து வெளியேறிட வேண்டும். திருக்குர்ஆனிடம் முழுமையாகத் தஞ்சம் புகுந்திடவேண்டும்.

தொடர்ந்து வரும்...

No comments:

Post a Comment