Wednesday, May 4, 2011

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 03

'கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது' என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்! 


இஸ்லாமிய அரசிற்கு எதிராக பிரிட்டன் மேற்கொண்ட சதித்திட்டங்கள்

சவூதி ஆட்சியாளர் பிரிட்டன் அரசின் விசுவாசமிக்க கங்காணி என்பதை கிலாஃபா அரசும் ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற மேற்கத்திய வல்லரசுகளும் நன்கு அறிந்திருந்தன. மேலும் சவூதி ஆட்சியாளர், பிரிட்டன் அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இயங்கினார் என்பதும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.



சவூதி ஆட்சியாளருக்கு அளித்துவந்த ஆதரவை பிரிட்டன் ஒரு போதும் மறைவாக வைத்திருக்கவில்லை. மேலும் போருக்கு தேவையான பெருமளவு ஆயுதங்களையும் போர்ச்செலவினங்களுக்கு தேவையான கணிசமான பணத்தையும் பிரிட்டன், இந்தியா வழியாக சவூதிக்கு அனுப்பி வைத்தது. ஆகவே மற்ற ஐரோப்பிய அரசுகள், குறிப்பாக ஃபிரான்ஸ் அரசு வஹ்ஹாபி இயக்கத்தை எதிர்த்தது. ஏனெனில் வஹ்ஹாபிகளை பிரிட்டன் அரசு பின்னணியில் நின்று இயக்கிவந்தது. கிலாஃபா அரசு வஹ்ஹாபிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு முயற்சி மேற்கொண்டும் அதை நிறைவேற்ற இயலவில்லை. மதினாவிலும் பாக்தாதிலும் இருந்த கிலாஃபா அரசின் ஆளுநர்களால் வஹ்ஹாபிகளின் ஆக்கிரமிப்பை தடுக்க முடியவில்லை.




இதன் விளைவாக வஹ்ஹாபிகளுக்கு எதிராக ஒரு வலுவான படையை அனுப்பி வைக்கும்படி எகிப்திலுள்ள தனது ஆளுநர் முஹம்மது அலிக்கு கிலாஃபா அரசு கட்டளையிட்டது. முதலில் இதற்கு அவர் தயக்கம் காட்டினார். ஏனெனில் உண்மையாக அவர் ஃபிரான்ஸ் அரசின் கங்காணியாக இருந்துவந்தார். அதிகாராத்தை பலவந்தமாக கைப்பற்றும் அவரது முயற்சிக்கு ஃபிரான்ஸ்உதவியாக இருந்தது. பின்னர், கிலாஃபா அரசை நிர்பந்தம் செய்து அவரது அதிகாராத்தை அங்கீகரிக்கும்படி செய்தது. ஃபிரான்ஸ் அரசுடன் செய்திருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் அதன் தூண்டுதலின் அடிப்படையிலும் துருக்கி சுல்தானின் (கலீஃபா) கட்டளையை ஏற்றுக்கொண்ட முஹம்மது அலி தனது மகன் தவ்ஸுன் தலைமையில் கி.பி. 1811ல் வஹ்ஹாபிகளுக்கு எதிராக படையை அனுப்பி வைத்தார். 




எகிப்திலிருந்து புறப்பட்ட இராணுவத்திற்கும் வஹ்ஹாபிகளுக்கும் மத்தியில் பல யுத்தங்கள் நடைபெற்றன. இந்த யுத்தங்களின் முடிவில் எகிப்திய இராணுவம் கி.பி. 1812ல் மதினாவை வெற்றிகொண்டது. இதன்பின்னர், முஹம்மது அலி தனது மற்றொரு மகன் இப்ராஹிமை கி.பி. 1816ல் கெய்ரோவிலிருந்து அனுப்பி வஹ்ஹாபிகளுக்கு எதிராக போரிடும்படி செய்தார். இப்ராஹிம் தலைமையில் போரிட்ட எகிப்து இராணுவம் வஹ்ஹாபிகளை முறியடித்தது. அவர்கள் தங்கள் தலைநகர் அல்திரிய்யாவுக்கு சென்று தங்களை பாதுகாத்துக் கொண்டார்கள். இதன்பின்னர் கி.பி. 1818ல் இப்ராஹிம் அல்திரிய்யாவை கைப்பற்றினார். கோடைக்காலம் முழுவதும் நிகழ்ந்த யுத்தமானது கி.பி. 1818 செப்டம்பர் 9ந்தேதியில் வஹ்ஹாபிகள் சரணடைந்ததுடன் முடிவுற்றது. இப்ராஹிமின் இராணுவம் அல்திரிய்யாவை துவம்சம் செய்தது. அல்திரிய்யா நகரத்தின் கட்டமைப்பில் எதுவொன்றையும் விட்டு வைக்காமல் முற்றாக சூறையாடியது. இஸ்லாமிய அரசுக்கு எதிரான பிரிட்டனின் திட்டமிட்ட நடவடிக்கை இதன் மூலம் தற்காலிகமாக முடிவுற்றது.



இஸ்லாமிய அரசை தாக்குவதற்கு ஃபிரான்ஸ் மேற்கொண்ட முயற்சி



தனது கங்காணியாக செயல்பட்டு வந்த எகிப்து ஆளுநர் முஹம்மது அலியின் துணைகொண்டு இஸ்லாமிய அரசின் முதுகில் குத்துவதற்கு ஃபிரான்ஸ் முயற்சி மேற்கொண்டது. சர்வதேச அளவிலும் உள்நாட்டு விவகாரங்களிலும் முஹம்மது அலியை ஃபிரான்ஸ் அரசு பகிரங்கமாக ஆதரித்து வந்தது. இதன்விளைவாக அவர் கலீஃபாவுடன் பிளவுபட்டு அவருக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்தார். கி.பி. 1831ல் ஷாம் பகுதியை கைப்பற்றும் நோக்கத்துடன் முஹம்மது அலி படையெடுத்தார். பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகியவற்றை ஆக்கிரமித்த பின்னர் அனதூலியாவை ஆக்கிரமிப்பதற்கு துவங்கினார். இந்நிலையில் முஹம்மது அலியின் படைகளுக்கு எதிராக போர் செய்வதற்காக ஒரு பலம் வாய்ந்த இராணுவத்தை கலீஃபா அனுப்பிவைத்தார். ரஷ்யாவும் ஜெர்மனியின் இரண்டு அரசுகளும் (கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி) முஹம்மது அலிக்கு எதிராக திரும்பின. 



கி.பி. 1840 ஜூலையில் பிரிட்டன், ரஷ்யா மற்றும் ஜெர்மனியின் இரண்டு அரசுகள் நான்முக கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டன. இதனடிப்படையில் உஸ்மானிய அரசின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பது என்றும், சிரியாவை விட்டு முஹம்மது அலியை வெளியேற்றுவது என்றும் தீர்மானம் செய்தன. ஐரோப்பிய நாடுகள் இத்தகைய ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டதால் கலீஃபாவுக்கு ஆதரவாக சர்வதேச அரசியல் சூழல் மாறியது. இந்த அரசியல் பலத்துடன் முஹம்மது அலியுடன் போர் செய்து அவரை சிரியாவிலிருந்தும் பாலஸ்தீனத்திலிருந்தும் லெபனானிலிருந்தும் கலீஃபா வெளியேற்றினார். எனினும் முஹம்மது அலி எகிப்து திரும்பியவுடன் அவர் தொடர்ந்து எகிப்தின் ஆளுநராக இருப்பதற்கு கலீஃபா சம்மதித்தார்.

தொடரும்...